விலைவாசி உயர்வால் இலங்கை மக்கள் பாதிப்பு...! நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சேவுக்கு வெற்றியா? தோல்வியா?

By Ajmal KhanFirst Published May 4, 2022, 10:34 AM IST
Highlights

  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டு அரசுக்கு  எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன, இந்த தீர்மானம் தோல்வி அடையும் என ராஜபக்‌ஷே நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் விலைவாசியானது பல மடங்கு உயர்ந்துள்ளது. குழந்தைகளுக்கு பால் மாவு, மருந்து என அடிப்படை பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அப்படி கிடைத்தாலும், அது அதிக விலைக்கு விற்கப்படுவதால்  அதை வாங்கி சாப்பிடும் அளவுக்கு வசதி இல்லாத நிலையில் குழந்தைகளும் பட்டினி கிடக்கும் நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரை பணயம் வைத்து குழந்தைகளோடு அன்றாடம் தமிழகத்தை நம்பி வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2 மாத்த்தில் மட்டும் 75க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.  இந்தநிலையில் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள், இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். 

ராஜபக்‌ஷேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

இந்தநிலையில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது அமைச்சரவையையும் பதவியில் இருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை பிராதான எதிர்கட்சி கொடுத்துள்ளது.   சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குழுவொன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கோரிய தீர்மானத்தை  பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (செவ்வாய் கிழமை) சமர்பித்தது.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்சே மற்றும் அவரது இளைய சகோதரர் அதிபர்  கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவையும் அமைச்சரவையையும் ஆட்சியில் இருந்து அகற்ற பெரும்பான்மை வாக்குகள் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. . ஐக்கிய மக்கள் சக்தியானது 54 வாக்குகளை மட்டுமே கொண்டுள்ளது. இதனையடுத்து சிறிய எதிர்க்கட்சிகளின் வாக்குகளையும், அரசு ஆதரவு தெரிவித்து வந்த கட்சிகள் தற்போது விலகியுள்ள நிலையில் அவர்களின் வாக்குகளும் கிடைக்கும் என எதிர்கட்சிகள்  எதிர்பார்த்துள்ளது. 

நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடையும்

இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டம் கூடவுள்ள நிலையில்,  கூட்டம் தொடங்கிய பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்க்கு முன்னதாக கருத்து தெரிவித்த இலங்கை பிரதமர் ராஜபக்‌ஷே தங்கள் அரசு மீது கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடையும் என்றும்  தங்கள் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என  தெரிவித்துள்ளார். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்‌ஷே தலைமையிலான அரசு தப்பிக்குமா ? என்ற கேள்வி இலங்கை மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.


 

click me!