பள்ளி வரும் குழந்தைகள் முகக்கவசத்தோடு சேர்ந்து முழு முகத்தையும் பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் மாஸ்க்கையும் அணிந்து பாடங்களை கவனித்து வருகின்றனர்
கொரோனா வைரஸ் உருவான சீனாவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் முதல் அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பிஞ்சு குழந்தைகளை கொரோனா தொற்றிலிருந்து காக்கும் விதமாக ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் உடல் வெப்பத்தை முறையாக பரிசோதித்து வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மாணவர்களிடையே தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களை மட்டுமே அமரவைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முறையாக கை கழுவுதல், சமூக இடைவெளி, ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதை தவிர்த்தல் உள்ளிட்டவற்றில் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி சீனாவில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் அணிந்து வரும் புதுவித சீருடை புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.
பள்ளி வரும் குழந்தைகள் முகக்கவசத்தோடு சேர்ந்து முழு முகத்தையும் பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் மாஸ்க்கையும் அணிந்து பாடங்களை கவனித்து வருகின்றனர். சீனக்குழந்தைகளின் இந்த புதுவித சீருடை புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கண், மூக்கு, வாய் போன்ற இடங்களை கையால் தொடுவது ஆபத்தானது என்பதால் இந்த புதுவித மாஸ்க்கை அனைத்து குழந்தைகளும் அணிந்துள்ளனர். அதேபோல் பள்ளி குழந்தைகளை தேர்வுக்கு தயார் செய்வதை விட சமூக இடைவெளியின் அத்தியாவசியம் குறித்தே தற்போது வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
இதற்கு முன்னதாக சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் தலைநகரான ஹோங்சூவில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அங்கு சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக மற்றொரு புது டெக்னிக் கடைபிடிக்கப்பட்டது. அதாவது பள்ளி மாணவர்களின் தலையில் விமானத்தின் கற்றாடி போன்ற அமைப்பு கொண்ட எடையில்லா அட்டை பொருத்தப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்வதை தடுக்க முடிந்தது. சுமார் 3 அடி நீளமுள்ள இந்த அட்டைகளை பொருத்துவதன் மூலம் பிஞ்சு குழந்தைகள் இடையே சமூக இடைவெளியை காக்க முடிவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.