கர்தாபூர் வரும் இந்திய யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என முதலில் கூறிய பாகிஸ்தான் தற்போது இந்திய யாத்ரீகர்கள் கட்டாயம் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என மாற்றி பேசியுள்ளது.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் நினைவாக பல 100 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூரில் தர்பார் சாஹிப் குருத்வாரா கட்டப்பட்டது. இங்கு செல்வது சீக்கியர்களின் வாழ்நாள் கடமையாக கருதப்படுகிறது. இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாரவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்து விட்டது. நாளை பாகிஸ்தானில் இம்ரான் கான் கர்தாபூர் வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், கடந்த 1ம் தேதியன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில், இந்தியாவிலிருந்து கர்தாபூர் குருத்வாராவுக்கும் வரும் யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் அவசியல் இல்லை. செல்லத்தக்க அடையாள அட்டை இருந்தாலே போதும். இனி பயணத்துக்கு 10 நாள் முன்னதாக பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு இல்லை. மேலும், கர்தார்பூர் வழித்தடம் தொடக்க நாளன்றும், குருநானக்கின் 550 பிறந்தநாள் நினைவாக அதற்கு அடுத்த நாளும் இந்திய யாத்ரீகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என பதிவு இருந்தார்.
ஆனால் தற்போது இந்திய யாத்ரீகர்கள் கட்டாயம் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கர்தாபூர் வரும் இந்திய யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் மிக அவசியம் என பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்தாக அந்நாட்டு செய்தி சேனல் தெரிவித்தது. இதனையடுத்து இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கர்தாபூர் குருத்வாராவுக்கு செல்ல இருக்கும் யாத்ரீகர்கள் கையில் பாஸ்போர்ட்டு வைத்திருக்கும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது.