கொரோனா அச்சுறுத்தலிலிருந்து உலகம் இன்னும் மீளாத நிலையில், சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதிய காய்ச்சல் மனிதர்களைத் தாக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
கொரோனா அச்சுறுத்தலிலிருந்து உலகம் இன்னும் மீளாத நிலையில், சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதிய காய்ச்சல் மனிதர்களைத் தாக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள். சீனாவில் உள்ள பன்றிகளுக்கு அடிக்கடி ஏற்படும் வைரஸ் காய்ச்சல், மனிதர்களுக்கு பரவும் ஆற்றல் கொண்டதெனவும், இது மேலும் மாற்றமடைந்து மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும் என்பதோடு உலகளாவிய தொற்றாக மாறக்கூடுமென புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புதிய காய்ச்சல் வைரசிற்கு ஜி 4 என பெயரிடப்பட்டுள்ளது. புதிய ஜி 4 வைரஸ், மரபணு ரீதியாக 2009ல் பரவிய எச் 1 என் 1 தொற்று விகாரத்திலிருந்து வந்துள்ளது. சீன பல்கலை மற்றும் சீனாவின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பின் விஞ்ஞானிகள், புதிய வைரஸ் மனிதர்களை பாதிக்க மிகவும் ஏற்றதாக இருப்பதற்கான அனைத்து முக்கிய அடையாளங்களும் இருப்பதால், நெருக்கமாக கண்காணிப்பது அவசியமென கூறியுள்ளனர்.
ஜி 4 வைரஸால் மனிதர்கள் பாதிக்கப்பட்டால் மிகவும் கவலைக்குரியதாக மாறும் மற்றும் மனித தொற்று நோயாக மாறி அபாயத்தை அதிகரிக்குமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய வைரஸ் மூன்று மரபணுக்களின் தனித்துவ கலவையாகும். ஒன்று ஐரோப்பிய மற்றும் ஆசிய பறவைகளில் காணப்படும் மரபணுவோடும், 2009ல் பரவிய எச் 1 என் 1 மரபணுவோடும் மற்றும் வட அமெரிக்க எச் 1 என் 1 மரபணுவோடும் பறவை, மனித மற்றும் பன்றி காய்ச்சல் வைரஸ்களிலிருந்து வரும் மரபணுக்கள் உள்ளது. ஜி 4 மாறுபாடு மிக முக்கியமானது. ஏனெனில், அதன் மையம் பறவை காய்ச்சல் வைரஸ் ஆகும். பாலூட்டியின் மரபணு கலந்திருக்கும் என்பதால், மனிதர்களுக்கு அதனை எதிர்க்க நோய் எதிர்ப்பு சக்தி இல்லை.
சீன வேளாண் பல்கலையை சேர்ந்த லியு ஜின்ஹுவா தலைமையிலான குழு, 10 சீன மாகாணங்களில் உள்ள இறைச்சிக் கூடங்களில் பன்றிகளிடமிருந்து எடுக்கப்பட்ட கிட்டத்தட்ட 30,000 மாதிரிகளையும், 2011 முதல் 2018 வரை கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறிகுறிகளுடன் உள்ள பன்றிகளிடமிருந்து 1,000 மாதிரிகளையும் ஆய்வு செய்தது. இது தொற்றுநோயான காய்ச்சல் குறித்து அடையாளம் காணும் திட்டத்தின் ஒரு பகுதி.
இதனிடையே இதில் அச்சம் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இது புதுவிதமான நோய் என்பதால் மனிதர்களுக்கு இதை எதிர்கொள்ள நோய் எதிர்ப்புச் சக்தி என்பது இருக்காது. இதனால் தற்போது எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், இதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த வைரஸானது ஜி4 இஏ எச்1என்1 என ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படுகிறது.