ஆய்வுகளின் படி கொரோனா வைரஸ் BA. 2 வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது இந்த வேரியண்ட் பத்து மடங்கு வரை வேகமாக பரவும் என கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய XE வேரியண்ட் முந்தைய ஒமிக்ரானை விட பத்து மடங்கு வேகமாக பரவும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை பரவி நம்மை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் வகைகளில், ஒமிக்ரான் BA. 2 சப்-வேரியண்ட் மிக வேகமாக பரவும் என கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில், கொரோனா வைரசின் புது வேரியண்ட் உருவாகி நம்மை அச்சுறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளர்வுகள்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரக் கணக்கிலேயே இருந்து வருவதால், பல மாநிலங்களில் கொரோனா தட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டும் இன்றி சில மாநிலங்கள், மொது மக்கள் முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவித்து விட்டன. இந்த நிலையில், தான் புதிய கொரோனா வைரஸ் XE வேரியண்ட் பற்றி உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
ஒமிக்ரான்:
கொரோனா வைரசின் ஒமிக்ரான் BA. 2 சப்-வேரியண்ட் உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் பதிவு செய்யப்படும் கொரோனா வைரஸ் பாதிப்புகளில் பெரும்பாலானவை ஒமிக்ரான் BA. 2 சப்-வேரியண்ட் என ஆய்வில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புது வைரஸ்:
புதிய கொரோனா வைரஸ் வேரியண்ட் XE ஒமிக்ரான் BA. 1 மற்றும் BA. 2 வேரியண்ட்களின் ஹைப்ரிட் வகையை சேர்ந்தது ஆகும். தற்போது உலகம் முழுக்க சிறு பகுதிகளில் மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. முதன் முதலில் கொரோனா வைரஸ் XE வேரியண்ட் ஜனவரி 19 ஆம் தேதி பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது முதல் இதுவரை சுமார் 600-க்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே XE வேரியண்ட் பாதிப்பு இருந்தது என உலக சுகாதார மையம் ஏற்கனவே தெரிவித்தது.
முதற்கட்ட ஆய்வு:
புதிய கொரோனா வைரஸ் வேரியண்ட் XE குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், BA. 2 வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது இந்த வேரியண்ட் பத்து மடங்கு வரை வேகமாக பரவும் என கண்டறியப்பட்டு உள்ளது. இதே தகவலை உறுதிப்படுத்த, மேலும் சில ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது. இதுபற்றிய இதர விவரங்கள் வெளியாகும் வரை புதிய XE வேரியண்ட் ஒமிக்ரான் வேரியண்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டு இருக்கும். என உலக சுகாதார மையம் தெரிவித்து இருக்கிறது.
இதர வேரியண்ட்கள்:
பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு ஆணையம் மேற்கெண்டு வரும் ஆய்வின் படி தற்போது மூன்று வகையான கொரோனா வைரஸ் வேரியண்ட்கள் பரவி வருகின்றன. இவை XE, XD மற்றும் XF என வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவை முந்தைய வைரஸ் வேரியண்ட்களை சார்ந்து உருவாகி இருக்கின்றன.