புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள 'அகண்ட பாரதம்' சுவர் ஓவியம் நேபாள நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம் மே 28ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டடத்தில் சுவர் ஓவியங்கள், கற்சிற்பங்கள், உலோக பொருட்கள் உட்பட சுமார் 5 ஆயிரம் கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புதிய கட்டிடத்தில் 6 நுழைவாயில்கள் உள்ளன. இங்குள்ள சுவர் ஓவியங்களில் ‘அகண்ட பாரதம்’ (பிரிக்கப்படாத இந்தியா) வரைபடமும் உள்ளது. அதில் நேபாளப் பகுதியைச் சேர்ப்பது குறித்து இப்போது சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் உள்ள அகண்ட பாரதம் என்ற வரைபடத்தில் நேபாளத்தின் லும்பினி, கபில்வஸ்து ஆகிய பகுதிகள் இந்தியாவில் இணைந்துள்ளதாக வெளியான அறிக்கைகள் மீது நேபாள அரசாங்கத்தின் கவனம் குவிந்துள்ளது. இந்த விவகாரத்தை அரசு கவனத்தில் கொண்டுள்ளது, விரைவில் தீர்வு காணும் என நேபாள நாட்டின் எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சக்தி பகதூர் பாஸ்நெட் விளக்கம் அளித்துள்ளார்.
நேபாளம் நாட்டை எந்த அடிப்படையில் இந்திய வரைபடத்துடன் இணைக்க முடியும்? என நேபாள நாட்டு பிரதமரிடம் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நேபாள பிரதமர் பிரசந்தா, அரசு முறை பயணமாக இன்று (மே.31) இந்தியா வந்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில் வந்துள்ள அவர் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றத்தை கட்டி முடிக்க எத்தனை கோடி செலவானது?