4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் மாயமான விமானம்... ஹெலிகாப்டர் கொண்டு தேடும் பணி தீவிரம்..!

By Kevin KaarkiFirst Published May 29, 2022, 12:08 PM IST
Highlights

ஜாம்சோம் பகுதியை சேர்ந்த மஸ்டங் மாவட்டத்தில் இந்த விமானம் கடைசியாக காணப்பட்டது. அங்கிருந்து மவுண்ட் தௌலகிரிக்கு இந்த விமானம் திருப்பி விடப்பட்டு இருக்கிறது.

நேபாலில் 22 பேருடன் புறப்பட்ட விமானம் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது. நான்கு இந்தியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் இந்த சிறிய விமானத்தில் பயணம் செய்தனர். டாரா ஏர் 9 NAET ட்வின்-என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் போக்காராவில் இருந்து ஜாம்சம் நோக்கி பறந்து கொண்டு இருந்தது என முதற்கட்ட விசாரணையில் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

காணாமல் போன விமானம் நேபால் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள போக்காரா எனும் சுற்றுலா தளத்தில் இருந்து வடமேற்கு திசையில் உள்ள ஜாம்சோம் பகுதிக்கு பறிந்து கொண்டு இருந்தது. ஜாம்சோம் பகுதியை சேர்ந்த மஸ்டங் மாவட்டத்தில் இந்த விமானம் கடைசியாக காணப்பட்டது. 

தொடர்பு துண்டிப்பு:

அங்கிருந்து மவுண்ட் தௌலகிரிக்கு இந்த விமானம் திருப்பி விடப்பட்டு இருக்கிறது. விமானம் திருப்பி விடப்பட்டது முதல் கட்டுப்பாட்டு பகுதி உடனான தொடர்பில் இருந்து மறைந்து விட்டது என மாவட்டத்தின் மூத்த அலுவலர் நேத்ரா பிரசாத் ஷர்மா தெரிவித்தார். 

காணாமல் போன விமானத்தில் நான்கு இந்தியர்கள், மூன்று ஜப்பானியர்கள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 22 பேர் உள்ளனர். மஸ்டங் மற்றும் போக்காரா பகுதிகளில் இருந்து இரண்டு தனியார் ஹெலிகாப்டர்கள் மூலம் காணாமல் போன விமானத்தை தேடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக நேபால் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த நேபால் ராணுவ ஹெலிகாப்டர் தயார்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது, எனினும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மலை பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் டிரெக்கிங் செய்வது வாடிக்கையான விஷயம் ஆகும். இதோடு நேபாலை சேர்ந்த யாத்ரீகர்கள் முக்திநாத் கோவிலுக்கு வந்து செல்வர். 

click me!