தெற்கு நைஜீரியாவில் தேவாலயத்தில் நடைபெற்ற உணவு விருந்து வழங்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவுகளை வாங்க முண்டியடித்த பொதுமக்கள்
நைஜீரியர்களில் 10 பேரில் நான்கு பேர் தேசிய வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர். மேலும் உக்ரைனில் ஏற்பட்டுள்ள போரின் காரணமாக கோதுமை மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் உணவு மற்றும் எரிபொருளின் விலையும் உயர்ந்துள்ளது, இதன் காரணமாக ஆப்பிரிக்காவில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடைந்து வருவதாக தனியார் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் தெற்கு நைஜீரியாவில் தேவாலயத்தில் கிங்ஸ் அசெம்பிளி தேவாலய அமைப்பு மற்றும் போர்ட் ஹார்கோர்ட் போலோ கிளப் சார்பாக பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிந்து இருந்தனர். அப்போது உணவுகளை பொதுமக்கள் வாங்க ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்தனர்.
undefined
கூட்ட செரிசலில் சிக்கி 31 பேர் பலி
அப்போது தேவாலயத்தில் உள்ள சிறிய நுழைவுவாயில் வழியாக ஏராளமானோர் உணவுகளை வாங்க உள்ளே செல்ல முற்பட்டனர். அப்போது கூட்டம் அதிகளவு திரண்டதால் அங்குள்ள காவல் துறை அதிகாரிகளால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது பொதுமக்கள் மிதித்து சென்றதால் மூச்சு விட முடியாமல் 20க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு விடமுடியாமல் இருந்தவர்களை மீட்ட போலீசார் ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மேலும் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மொத்தமாக 31 பேர் உயிரிழந்த நிகழ்வு தெற்கு நைஜீரிய மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளில் உணவு விநியோகம் தொடர்பான நடைஎற்ற நிகழ்வுகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு வடக்கு போர்னோ மாநிலத்தில் உணவு வழங்கும் நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பெண்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.