உலகளவில் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகளவில் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் உலகை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது மக்களை அச்சுறுத்தும் வகையில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னாலில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. மனிதர்களிடையே பரவிய சின்னம்மை, பெரியம்மை நோயை போல குரங்குகளிடம் பரவிய அம்மை நோய் மனிதர்களிடையே பரவுவதையே குரங்கு அம்மை நோய் என அழைக்கின்றன.
வழக்கமாக மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோயாகிய இந்த குரங்கு அம்மை நோய், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் பரவி வருவதன் காரணம் குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டது. அதிகபட்சமாக போர்ச்சுக்கல் நாட்டில் குரங்கு அம்மை நோய் 40க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் ஸ்பெயின் நாட்டில் 23 பேருக்கும், கனடாவில் 13 பேருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் 9 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உலகளவில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் குறித்த கண்காணிப்பு பணிகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், இது கட்டுப்படுத்தக்கூடிய நோயாக இருந்தாலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 118 பேருக்கு இந்நோய் உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.