வளர்த்த கிடா நெஞ்சில் பாய்கிறது...!! இந்தியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் இறங்கும் நேபாளம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 20, 2020, 8:13 PM IST
Highlights

இந்திய எல்லைப் பகுதியில் ராணுவ முகாம்களை அமைக்க திட்டமிட்டுள்ள நேபாள அரசு, ராணுவ தளவாடங்கள் எல்லை நோக்கி சென்றடைய கலபானிஅருகே சாலைகளை அமைத்து ராணுவ முகாம்களை  நிர்மாணிக்க முயற்சித்து வருகிறது. 

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ள  நிலையில், மற்றொரு அண்டை நாடான நேபாளம் இந்தியாவில் உள்ள சில பகுதிகள் தங்களுக்கு சொந்தம் எனக்கூறி, அது இந்தியாவுக்கு எதிராக ராணுவத்தை நிறுத்தியிருப்பது, இந்தியாவை மிகுந்த கோபம் அடைய வைத்துள்ளது. கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்திய-சீன  எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி,  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது, அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. 

இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்திய படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் சீனர்கள் தாக்குதல் நடத்த ஏற்கனவே தயாராக இருந்ததால், பயங்கர ஆயுதங்களை கொண்டு இந்திய ராணுவ வீரர்களை கடுமையாக தாக்கினர். அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத பேரிழப்பாக இது கருதப்படுகிறது. இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 35 சீனர்கள் கொள்ளப்பட்டதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்பு நடந்ததை ஏற்றுக் கொண்ட சீனா, எத்தனைபேர் இறந்தனர் என்ற விவரத்தை வெளியிடவில்லை. இந்நிலையில் சீனவைப்போல 

இந்திய எல்லைப் பகுதிகளான கலபானி, லிபுலேக்,மற்றும் லிம்பியதூரா ஆகிய பகுதிகள் நேபாளத்திற்கு சொந்தமென கூறும் அந்நாட்டு அரசு, அந்த மூன்று பகுதிகளையும் இணைத்து  புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அந்த புதிய அரசியல் வரைபடத்திற்கு நேபாள அரசு  ஒப்புதல் பெற்றுள்ளதுடன், இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் ராணுவ முகாமை நிறுவவும், புதிய சாலைகளை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறது. இந்திய எல்லைப் பகுதி அருகே புறக்காவல் நிலையம் ஒன்றையும் அமைத்து, அங்கு நேபாள வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேபாள ராணுவ தலைமை தளபதி பூர்ணா சந்திரன் தாபா, கலபானி எல்லைப் பகுதிக்கு சென்று அங்கு பார்வையிட்டுள்ளார். இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதியில் ராணுவ முகாம்களை அமைக்க திட்டமிட்டுள்ள நேபாள அரசு, ராணுவ தளவாடங்கள் எல்லை நோக்கி சென்றடைய கலபானிஅருகே சாலைகளை அமைத்து ராணுவ முகாம்களை  நிர்மாணிக்க முயற்சித்து வருகிறது. 

இந்திய எல்லை பகுதிகளில்  இந்தியாவுக்கு எதிராக  எல்லையில் படைகளை குவிக்கவும், ராணுவ முகாம், மற்றும் சாலைகளை அமைக்கவும் முயன்றுவரும் நேபாள ராணுவத்தின் செயல் இந்தியாவை கோபமடைய வைத்துள்ளது.  ஏற்கனவே சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் இந்திய எல்லையில் அத்துமீறி வரும் நிலையில், அந்தவரிசையில் நேபாளம் இந்தியாவுக்கு தொல்லை கொடுக்க தீவிரம்காட்டி வருகிறது.  இந்தியாவின் உதவியால் இந்த அளவிற்கு வளர்ந்துள்ள நேபாளம் இப்போது சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவை எதிர்க்க துணிந்துள்ளது துரோகத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. 
 

click me!