மியான்மர் ராணுவம் அட்டூழியம்.. 114 பேர் படுகொலை.. காட்டுமிராண்டித்தனம் என அதிபர் ஜே பிடன் கொதிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Mar 29, 2021, 12:45 PM IST
Highlights

பெருமளவில் யங்கூன் மற்றும் மாண்டலே நகரங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான ராணுவ எதிர்ப்பை குறிக்கும் ஆயுதப்படை நாளில் இந்த படுகொலை நடத்தப்பட்டுள்ளது.  

ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் போராடிய 114 க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது என அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மியான்மர் ராணுவத்தின் மூர்க்கத்தனமான செயல், மிக மோசமான செயல்,  தேவையில்லாமல் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவத்தின்  இந்நடவடிக்கையை எதிர்த்து கிளர்ந்தெழுந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில் மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் கண்மூடித்தனமாக ஈடுபட்டுவருகிறது. இதுவரை அந்நாட்டில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் 400க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலையில் ராணுவத்தின் தொடர் அட்டூழியத்தை எதிர்த்து பொதுமக்கள் வீதிகளில் குவிந்து போராடி வருகின்றனர். நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. 

இந்நிலையில்  கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரசு தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மியான்மர் நாட்டின் முந்தைய கொடூரமான மரணங்களில் இருந்து மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும், தலையிலோ அல்லது முதுகிலோ சுடப்படும் ஆபத்து உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என அந்நாட்டு ராணுவம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்நிலையில் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான யங்கூனில்  உள்ள அமெரிக்க வெளியுறவு துறைக்கு சொந்தமான கலாச்சார மையத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல நாட்டிலுள்ள பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இந்த வன்முறைச் சம்பவங்களை கடுமையாக கண்டித்து வருகின்றனர். சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவர்கள் பெண்கள் உட்பட 114 பேர் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் மன்றம் குற்றம்சாட்டியுள்ளது. 

பெருமளவில் யங்கூன் மற்றும் மாண்டலே நகரங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான ராணுவ எதிர்ப்பை குறிக்கும் ஆயுதப்படை நாளில் இந்த படுகொலை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பிடன், மியான்மரில் நடக்கிற சம்பவம் பயமுறுத்துகிறது. இது முற்றிலும் கொடுமையானது, எனக்கு கிடைத்த தகவலின் படி ஏராளமான மக்கள் அனாவசியமாக கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரில் நடந்த ராணுவ சதித் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அப்பாவி மக்களுக்கு எதிராக ராணுவம் ஆயுதத்தை பிரயோகித்துள்ளது. பர்மிய ராணுவம் நாட்டின் தேசிய ஆயுதப்படை தினத்தில் ஒரு அபத்தமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான நிலைபாட்டை எடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை கொன்றுள்ளது. ஆட்சிக்கவிழ்ப்பிற்குப் பின்னர் ராணுவம் இந்த ரத்தக்களரியில் ஈடுபட்டுள்ளது. என தனது எதிர்ப்பையும் ஆதங்கத்தினையும் பதிவு செய்துள்ளார். 

 

click me!