தென்கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள, அமெரிக்க ராணுவத் தளபதி ஒருவர், அன்மையில் கொரோனாவை தடுக்க சீனாவில் இருந்து வட கொரியாவிற்கு நுழைய முயலுபவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வைரஸ் தொற்று உள்ளவர்களை கண்டால் உடனே சுட்டுக்கொள்ள அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் வடகொரியாவின் பொருளாதாரத்தை விமர்சித்துப் பேசிய முக்கிய 5 அதிகாரிகளுக்கு அவர் மரணதண்டனை நிறைவேற்றியதாகவும், அவர்கள் 5 பேரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிக சர்வாதிகாரம் மிக்க தலைவராக கிம் ஜாங் உன் பார்க்கப்படுகிறார். அணு ஆயுதங்களை வைத்துக் கொண்டு உலகையே மிரட்டி வரும் இவர், பெரும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தனது சர்வாதிகார போக்கால், உலகின் பல்வேறு நாடுகள் இவரை எதிர்க்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இவரை கடுமையாக எதிர்த்தாலும், அவரிடம் உள்ள அணு ஆயுதங்களை கண்டு அந்நாடுகள் வடகொரியா மீது போர்தொடுக்க முடியாமல் திணறுகின்றன. உலக நாடுகளை எல்லாம் கட்டுப்படுத்தக்கூடிய அமெரிக்கா, வடகொரியாவை எதிர்க்கவோ அல்லது அரவணைக்க முடியாமலோ திண்டாடி வருகிறது. அதேபோல் தனது நாட்டில் நடக்கும் எந்த தகவலையும் வடகொரியா வெளியுலகுக்கு தெரிவிப்பது இல்லை. இதனால் இரும்புக்கோட்டை நாடாக அது கருதப்படுகிறது. அந்நாடு குறித்த சில தகவல்கள் வெளியே கசிந்தாலும் அத்தகவல் மிகப்பெரிய ஆச்சரியப்படுத்த கூடியதாக இருக்கும்.
சமீபகாலமாக கிம் ஜாங் உன்னைப் பற்றி பல்வேறு யூகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதாவது தனக்கு எதிராக மனநிலை கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனே தீர்த்துக்கட்டி விடுவார் கிம் ஜாங் உன் என்ற கருத்து நிலவி வருகிறது. அந்தவகையில் தனக்கு எதிராக சதியில் ஈடுபட்ட தனது சொந்த மாமாவையே அவர் நாய்களுக்கு இறையாக்கினார் என்ற விமர்சனமும் அவர்மீது உள்ளது. தனக்கு போட்டியாக வரக்கூடும் என்பதால் தனது சகோதரரையே அவர் கொன்றவர் என்ற புகார் அவர் மீது உள்ளது. மலேசியாவில் வசித்து வந்த கிம் ஜாங் நாம், மலேசிய விமான நிலையத்தில் விஷ ஊசி செலுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதற்குப் பின்னணியில் இருப்பவர் கிங் ஜாங் உன் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. தனக்கு எதிரான மனநிலை கொண்டவர்களை கொல்வதற்கு கிம் ஜாங் உன் ஒருபோதும் தயங்குவது இல்லை என அவர் மீது விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் வட கொரியாவில் நடந்த இரவு விருந்து ஒன்றில் அந்நாட்டின் பொருளாதாரம் குறித்து கேள்வி எழுப்பிய 5 அதிகாரிகளை அவர் வெட்டிக் கொல்ல உத்தரவிட்டதாகவும், ஜூலை 30ஆம் தேதி அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கொல்லப்பட்ட அந்த ஐவரின் குடும்பமும் யெடோக்கில் உள்ள ஒரு அரசு முகாமுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை குறித்து விவாதிக்க அதிகாரிகள் கூட்டப்பட்டதாகவும், அந்நேரத்தில் அந்த ஐந்து அதிகாரிகள் கிம் ஜாங் உன் ஆட்சியின் கொள்கைகளை விமர்சித்ததாகவும், கலந்துரையாடலின் போது நாட்டின் தொழில்துறை முன்னேற்றத்தின் அவசியத்தை அவர்கள் கூறியதுடன், அதன் தடைகளை முறியடிக்க வடகொரியாவும் வெளிநாடுகளின் உதவிகளை நாட வேண்டும் என்று அவர்கள் கூறியதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிங் ஜாங் உன், அவர்களுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் தென்கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள, அமெரிக்க ராணுவத் தளபதி ஒருவர், அன்மையில் கொரோனாவை தடுக்க சீனாவில் இருந்து வட கொரியாவிற்கு நுழைய முயலுபவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் வடகொரியா தங்களது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கூறி வருகிறது. கொரோனாவை தங்களது நாட்டில் தடுக்க, ஜனவரி மாதமே சீன எல்லையை வடகொரியா மூடியது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள நபர்களை சுட்டுக் கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.