
இலங்கையின் மத்திய மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் டிக்கோயா நகர் ஆகும். மலைப்பகுதி அதிகம் உள்ள இங்கு தேயிலை முக்கிய பயிராகும். இங்கு ரூ.150 கோடி செலவில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஒன்றை இந்திய அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு 2 நாட்கள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி இந்த மருத்துவமனையை நேற்று திறந்து வைத்தார். இதற்காக கொழும்பு நகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் டிக்கோயா நகருக்கு பிரதமர் மோடி சென்றார்.
மேலும், டிக்கோயோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் தமிழர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். இதில் அதிபர் சிறீசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, தேயிலைக்கும், தனக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றார். தனது இளமைக் காலத்தில் தான் தேயிலை விற்பனை செய்ததை நினைவுபடுத்தியும், தேயிலை தோட்டத்தில் மக்கள் பணியாற்றுவதையும் இணைத்து நெங்கிய தொடர்பு இருப்பதாக மோடி பேசினார்.
அவர் பேசுகையில், “ தேயிலை விளையும் மலைப்பகுதியில் தமிழர்கள் வாழ்கிறார்கள். சிலோன் தேயிலையின் பெருமை உலகமே அறியும். எனக்கும், தேயிலைக்கும் நெருங்கிய, சிறந்த தொடர்பு உண்டு. உங்களுக்கும், எனக்கும் கூட நெருங்கிய தொடர்பு உண்டு.
டீ குடித்துக்கொண்டே பேசலாம் என்பது, ஒரு நேர்மையான தொழிலாளரின் மரியாதை, நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது’’ என்றார்.