
இந்தியர் குல்புஷன் ஜாதவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அதை தடை செய்து சர்வதேச நீதிமன்றம் பிறப்பிட்ட தடை உத்தரவை பாகிஸ்தான் மதிக்க வேண்டும் என்று அந்நாட்டு ஊடகங்கள் அறிவுரை வழங்கியுள்ளன.
இந்திய உளவாளி என்று குற்றம் சாட்டி குல்புஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் மரண தண்டனை விதித்தது. அவரை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சந்திந்து பேசவும் பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனை விசாரித்த 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு குல்புஷன் ஜாதவ் மரண தண்டனைக்கு அண்மையில் இடைக்கால தடை விதித்தது. இறுதி தீர்ப்பு வரும்வரை ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குல் பூஷண் ஜாதவ் வழக்கில் தலையிட சர்வதேச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று ஆட்சியாளர்கள் வாதிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் உள்ள பெரும்பாலான ஊடகங்கள், சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து நடக்குமாறு அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளன.
‘பாகிஸ்தான் டுடே’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகிவிட்டு அதன் உத்தரவை ஏற்க மாட்டோம் என்று கூறுவது அறிவுடமை அல்ல. நீதிபதிகளின் உத்தரவை ஏற்பதை தவிர வேறுவழியில்லை” என்று தெரிவித்துள்ளது.
டான் ஆங்கில நாளிதழின் தலையங்கத்தில், “சர்வதேச நீதிபதிகளின் உத்தரவுக்கு பாகிஸ்தான் அரசு மதிப்பளிக்க வேண்டும். குல்புஷன் ஜாதவ் வழக்கை ராணுவ நீதிமன்றத்தில் இருந்து பொது நீதிமன்றத்துக்கு மாற்றுவது நல்லது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ‘தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’ உள்ளிட்ட பெரும் பாலான ஊடகங்கள் சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து நடக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளன.