
ஈரான் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ருஹானி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
ஈரான் நாட்டின் அதிபர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் ஹசன் ருஹானி (68) மற்றும் இப்ராகிம் ராய்சி (56) ஆகியோர் போட்டியிட்டனர். நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு இருந்த செய்திகளின்படி 70 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. சுமார் 4 கோடி பேர் வாக்களித்து இருந்தனர்.
வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மொத்தம் பதிவான வாக்குகளில்
ருஹானி 57 சதவீதம் அதாவது 2.35 கோடி வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இப்ராஹிம் ரெய்சி 38.3 சதவீத வாக்குகள், அதாவது 1.58 கோடி வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
முன்னாள் அதிபர் அகமதி நிஜாத் தலைமையில் ஈரானில் நடந்த அணு ஆய்வு மற்றும் மேம்பாட்டுத்திட்டங்களால் சர்வதேச நாடுகள் ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதித்தன. ஆனால், தற்போதுள்ள அதிபர் ஹசன்ருஹானி தலைமையில் ஆட்சி அமைந்தபின், வல்லரசு நாடுகளுடன் ஆக்கப்பூர்வ பேச்சு நடந்தது.
அணு மூலப்பொருட்களை அழிவுக்கு பயன்படுத்தக்கூடாது என்பது தொடர்பாக 2015ம் ஆண்டு வல்லரசு நாடுகளுடன் ருஹானி தலைமையில் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையொப்பமானது.
ஈரான் அதிபராக ருஹானி 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.