ஈரானுக்கு தண்ணீர் தேவை, பாகிஸ்தானுக்கு எங்களிடமிருந்து நிலம் தேவை, தலிபான்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆயுதங்களை வழங்கி எங்களது நாட்டை மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளியது பாகிஸ்தான், ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள்தான். தலிபான்கள் தங்களை உண்மையான இஸ்லாமியர்கள் என்று அழைத்துக்கொண்டால், இந்த அளவிற்கு அவர்கள் எப்படி மக்களை துன்புறுத்துவார்கள்,
தங்கள் நாட்டில் மோசமான இந்த நிலைமைக்கு பாகிஸ்தான், ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள்தான் காரணம் எனவும், தங்கள் நாட்டை சீரழித்த பாகிஸ்தான் நாட்டை அல்லாஹ் கல்லறையாக மாற்றுவான் என ஆப்கனிஸ்தான் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை 20 ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் முழுவதுமாக கைப்பற்றி இருக்கின்றனர் தலிபான்கள். தலிபான்களால் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மோசமான சூழ்நிலையால், பல வருடங்களுக்கு முன்பு தங்கள் தாயகத்தை விட்டு அகதிகளாக இந்தியாவுக்கு குடிபெயர்ந்த ஏராளமான மக்கள் டெல்லியின் லஜ்பத் நகரில் வசிக்கின்றனர். ஆப்கான் குடிமக்கள் பெரும்பாலானோர் இங்கு வசிப்பதால் முழுப் பகுதியும் ஆப்கன் காலனி என்று அழைக்கப்படுகிறது.
தற்போது அங்கு தலிபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ள நிலையில், தங்களின் எதிர்கால சந்ததியின் நிலைமைகள் என்ன ஆகுமோ என்ற கவலையில் அந்நாட்டுமக்கள் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கன் நாட்டில் இருந்து கல்வி வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவம் போன்ற காரணங்களுக்காக இந்தியாவுக்கு வரும் ஆப்கான் மக்கள் டெல்லியிலேயே தங்கி வாழ்ந்து வருகின்றனர். அங்கு வசிக்கும் ஏராளமான இளைஞர்கள் தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து மிகுந்த வேதனையும் ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளனர். தங்கள் நாட்டில் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், பெண்களை அவர்கள் வலுக்கட்டாயமாக மணந்து கொள்வதாகவும், ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலைமை மோசமாகிவிட்டது என்றும் கூறும் அவர்கள், இதற்கெல்லாம் காரணம் பாகிஸ்தானியர்கள்தான் என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தங்களது நாட்டில் பாகிஸ்தானியர்கள் அடிக்கடி தற்கொலைப்படை தாக்குதல் நடத்துகிறார்கள், எல்லையோரத்தில் வசிக்கும் இளம் பெண்களை துன்புறுத்துகிறார்கள், தங்கள் பள்ளிச் சிறுமிகளை மயக்க மருந்து கொடுத்து தங்கள் எல்லைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று குற்றம் சாட்டும் ஆப்கானிஸ்தானிய பெண்கள், " ஓ அல்லாஹ் பாகிஸ்தானை ஒரு கல்லறையாக ஆக்குவானாக " தலிபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்து என்ன செய்வது என்று நாங்கள் மிகவும் பதட்டமாக உள்ளோம் என அந்த பெண்கள் கூறியுள்ளனர். தலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால், இனி அவர்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்க மாட்டார்கள். இனி பெண்கள் சுதந்திரமாக வீதிகளில் நடக்க முடியாது, அப்படி மீறி ஒரு பெண் வீதிகளில் நடந்தால் அவள் கொல்லப்படுவாள். வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால், இரண்டு பர்தாக்களை அணிய வேண்டும், தாலிபன்கள் ஆட்சியில் ஒருபோதும் பெண்களுக்கு உரிமை கிடைக்காது. பெண்கள் படிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள், வேலை செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள், அங்கே டிவி, இன்டர்நெட் போன்றவற்றை பயன்படுத்த பெண்களுக்கு அனுமதி இல்லை.
தலிபான்கள் மிகவும் கொடூரமானவர்கள், அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை பார்க்கவே பயமாக இருக்கிறது என இங்குள்ள ஆப்கன் பெண்கள் கூறியுள்ளனர். மேலும் ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சதியால் இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலைக்கு எங்கள் நாடு தள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானுக்கு தண்ணீர் தேவை, பாகிஸ்தானுக்கு எங்களிடமிருந்து நிலம் தேவை, தலிபான்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆயுதங்களை வழங்கி எங்களது நாட்டை மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளியது பாகிஸ்தான், ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள்தான்.
தலிபான்கள் தங்களை உண்மையான இஸ்லாமியர்கள் என்று அழைத்துக்கொண்டால், இந்த அளவிற்கு அவர்கள் எப்படி மக்களை துன்புறுத்துவார்கள், சிறுவர்கள் கையில் எப்படி துப்பாக்கிகளை கொடுத்து அவர்களை வன்முறைக்கு அழைத்து செல்வர், இது அனைத்திற்கும் காரணம் பாகிஸ்தான் தான், எங்கள் குடும்பத்தை விட்டு நாங்கள் பிரிந்து இருக்கிறோம், ஆப்கனிஸ்தானில் தவிக்கும் எங்கள் குடும்பங்களை எண்ணி நாங்கள் கவலைப்படுகிறோம் என கண்ணீர் மல்க தங்களது வேதனையை அவர்கள் தெரிவித்துள்ளனர்.