மனைவிக்கு விவாகரத்து கொடுக்க மறுத்த கணவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது
சிங்கப்பூரில் தனது மனைவியுடன் நல்ல உறவில் இல்லாத கணவர் ஒருவர் அப்பெண்னை விவாகரத்து செய்யவும் மறுத்துள்ளார். அத்துடன், அந்நாட்டின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தரவுகளையும் மீறி நடந்துள்ளார்.
மேலும், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குடும்ப வன்முறையை வெளிப்படுத்தியதுடன், வேறு ஒரு பெண்ணையும் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம், 47 வயதான அந்த நபருக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது, முதலில் தனது மனைவியை கொடுமைப்படுத்தவில்லை என தெரிவித்த அவர், பின்னர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தானாக முன்வந்து காயப்படுத்தியது மற்றும் அந்நாட்டின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தரவை மீறியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
தாயே குழந்தைகள் மீது வெந்நீரைக் கொட்டிய கொடுமை! சிங்கப்பூர் பெண்ணின் கொடூரச் செயல்!
சீனாவைச் சேர்ந்த அவர், சிங்கப்பூரில் நிரந்தரமாக வசிக்கும் குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு 47 வயதாகிறது எனவும், அந்த தம்பதிக்கு 19 மற்றும் 13 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் ஒன்பது வயதில் ஒரு ஆண் பிள்ளை என மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பெண் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
கடந்த 2025ஆம் ஆண்டில் இருந்தே அந்த தம்பதி நல்ல உறவில் இல்லை என கூறப்படுகிறது. அவரது மனைவி விவாகரத்து செய்ய விரும்பினாலும், குற்றம் சாட்டப்பட்டவர் அதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.