
லண்டனின் வடக்கு கென்சிங்ஸ்டன் நகரில் 27 அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடந்த மிகப்பெரிய தீவிபத்தில், 10-வது மாடியில் வசித்த ஒரு பெண், தனது குழந்தையை காப்பாற்ற அங்கிருந்து கீழே வீசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
லண்டன் வடக்கு கென்சிங்ஸ்டன், லான்கேஸ்டர் வெஸ்ட் எஸ்டேட் பகுதியில்கிரனபெல் டவர் என்ற 27 அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. ஏறக்குறைய 120 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 1 மணி அளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. தீப்பிடித்து அறிந்து அங்கிருந்து குடியிருப்பு வாசிகள் அனைவரும் வௌியேறுவதற்குள் தீ ‘மளமளவென’ அனைத்து மாடிகளுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் 40 தீயணைப்பு வண்டிகள், 200-க்கும்மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் பரவத் தொடங்கியது. இதனால், மாடிவீடுகளில் சிக்கி இருந்த மக்கள் உயிரைக் காத்துக்கொள்ள என்ன செய்வது என தெரியாமல் திகைத்தனர். சிலர் மொட்டை மாடிக்கும் சென்று பதுங்கினர்.
இந்நிலையில், தீப்பிடித்து எரிந்துவரும் கட்டிடத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருந்தபோது, 10-வது மாடியில் வசித்த ஒரு பெண் தன்னுடைய உயிர் போனாலும், தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற திடீரென ஒரு முடிவு எடுத்தார். 10-வது மாடியில் இருந்து தனது குழந்தையை கீழே தூக்கி வீசி எறிந்தார்.
அதன்பின் இந்த காட்சியை பார்த்துக்கொண்டு இருந்த சமிரா லாம்ராணி கூறுகையில், “ கட்டிடம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருப்பதையும், தீயை அணைக்க ஒருபுறம் வீரர்கள் போராடுவதையும் பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது 10-வது மாடியில் இருந்து ஒரு பெண் அலறிக்கொண்டே இருந்தார். திடீரென தனது கையில் இருந்த குழந்தையை ஒரு சிறிய பாராசூட்டில் கட்டி, மேலே இருந்து தூக்கி கீழே வீசினார். அப்போது அந்த இடத்தில் நின்று இருந்த ஒரு இளைஞர் வேகமாக ஓடிச் சென்று தனது கைகளில் அந்த குழந்தை தாங்கிப்படித்தபடி கீழே விழுந்தார். இதில் அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தைக்கு சிறிய காயமே ஏற்பட்டது.
இதேபோல் ஏராளமான குழந்தைகள் ஒவ்வொரு தளத்திலும் அலறியபடியே இருந்தனர்’’ எனத் தெரிவித்தார்.
இந்த மிகப்பெரிய தீவிபத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர், 6-க்கும் மேற்பட்டோர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பின்பு தான் பலி எண்ணிக்கை தெரியவரும். ஆனால், பலி எண்ணிக்கை ஏராளமாக இருக்கும் என லண்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.