
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும், விவசாயிகள் வங்கியில் பெற்று இருந்த ரூ.30 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார். இந்நிலையில், மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் அரசிடம் பெற்ற கடன் தொகையாக ரூ.3.88 கோடி நிலுவையில் உள்ளது. இந்த தொகையை தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது-
மாற்றுத்திறனாளிகள் 6 ஆயிரத்து 821 பேர் பெற்ற கடன் தொகையான ரூ.3.88 கோடியை அடுத்த 100 நாட்களில் தள்ளுபடி செய்ய இருக்கிறோம்.
இப்போது வரை மாற்றுத்திறனாளிகள் சார்பில் ரூ.1.60 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது போல், மாற்றுத்திறனாளிகளுக்கும் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
இப்போது மாநிலத்தில் 2 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களை சுயநம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற முதல்வர்ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். தேசிய திறன்மேம்பாட்டு மையத்துடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக குடிசைத்தொழில், சிறு, குறுந்தொழில் தொடங்க ஊக்கமளிக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ30 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை சிறு கடைகள், வியாபாரம் செய்யவும் கடன் அளிக்கப்படும். ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை ரூ.300 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், திருமண உதவித்தொகையும் ரூ.20 ஆயிரத்தில் இருந்து, ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன்கார்டு, விசிப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுக்கு பதிலாக ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுபஸ்களில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.