இலங்கையில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உள்ளதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள துர்கா மண்டபத்தில் தேசிய தைப்பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது, இந்தியா வலியுறுத்தியபடி இலங்கை அரசியலமைப்பில் 13வது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று அறிவித்தார்.
“75 ஆண்டுகளுக்கு முன் டி. எஸ். சேனாநாயக்க ஏற்படுத்திய இலங்கையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் வகையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். அதுபற்றிய அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படும். இது தொடர்பாக விவாதிக்க அடுத்த வாரத்தில் அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறும்” என்று ரணில் பேசியுள்ளார்.
போரின்போது காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்று தெரிவித்த அவர், நாம் ஒரே நாட்டில் வாழ வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும் எனவும் கூறினார்.
Explained: நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்துகள் நடப்பது ஏன்?
மேலும், “தீவிரவாதத்தை தடுக்கும் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டுவர இருக்கிறோம். வடக்கிற்கு எதிராகவே இந்தச் சட்டத்தை கொண்டுவரப் போகிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். உண்மையில் நாட்டில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவே இச்சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.” என்றும் ரணில் வலியுறுத்தினார்.
போர் காலத்தில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தை அவற்றையும் உரிமையாளர்களிடம் வழங்க ராணுவம் தயாராக உள்ளது என்று ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
“13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அது வடக்குப் பகுதியின் பிரச்சினை மட்டும் அல்ல. தெற்கில் உள்ளவர்களும் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும்படி கோரியுள்ளனர். இதுபற்றி ஆலோசித்து படிப்படியாக நடவடிக்கை எடுப்போம்” என்றும் அதிபர் ரணில் உறுதி அளித்துள்ளார்.
ராணுவத்தின் அளவை பாதியாகக் குறைக்க இலங்கை அரசு முடிவு
இலங்கைத் தமிழர் இனப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியாக, 1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்தனேவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் உருவானது.
அதன்படி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரே மாகாணமாக ஆக்குவது, அங்கு தேர்தல் நடத்தி மாகாண சட்டமன்றம் அமைப்பது ஆகியவை ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு தமிழர்களுக்காக ஒரு மாகாணத்தை உருவாக்கினால் அவர்களுடைய உரிமைகள் காக்கப்படும் என நம்பப்படுகிறது. இச்சூழலில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.