மேற்கு இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் இன்று (திங்கள்கிழமை) காலை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான எந்த செய்தியும் இன்னும் வெளியாகவில்லை.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிங்கில் நகருக்கு தென்கிழக்கே 48 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையை ஒட்டிய ஆச்சே மாகாணத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலத்துக்கு அடியில் 48 கிலோ மீட்டர்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதால் உடனடியாக பாதிப்புகள் குறித்து எதுவும் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. ரிங் ஆப் பயர் என்று அழைக்கப்படும் பூமிக்கு அடியில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டு இருக்கும் அமைப்பில் இந்தோனேசியா அமைந்து இருப்பதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
undefined
கடந்தாண்டு நவம்பர் 21 ஆம் தேதி ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் குறைந்தது 331 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 600 பேர் காயமடைந்தனர். 2018 ஆம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் உயிரிழந்த பின்னர், இந்தோனேசியாவில் இது மிகப்பெரிய உயிரிழப்பாக பார்க்கப்பட்டது.
கடந்த 2004 ஆம் ஆண்டில், இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டு, 12க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,30,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழ்ந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.