துருக்கியில் விமான விபத்து: லிபியா ராணுவத் தளபதி உள்பட 5 பேர் மரணம்!

Published : Dec 24, 2025, 03:44 PM IST
Libya Military Chief Mohamed Al Haddad

சுருக்கம்

லிபிய ராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் முகமது அல்-ஹத்தாத், துருக்கியில் இருந்து நாடு திரும்பும் வழியில் விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவருடன் சேர்த்து மேலும் நான்கு முக்கிய ராணுவ அதிகாரிகளும் பலியாகியுள்ளனர்.

லிபிய ராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் முகமது அல்-ஹத்தாத் (Lt Gen Mohamed Al-Haddad), துருக்கியில் இருந்து நாடு திரும்பும் வழியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தச் செய்தியை லிபியப் பிரதமர் அப்துல் ஹமித் அல்-திபேபா உறுதிப்படுத்தியுள்ளார்.

விபத்து எப்படி நடந்தது?

துருக்கி தலைநகர் அங்காராவிற்கு (Ankara) அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டிருந்த அல்-ஹத்தாத், தனது குழுவினருடன் அங்காரா எசன்போகா விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 8:10 மணியளவில் ஒரு 'பால்கன் 50' (Falcon 50) ரக ஜெட் விமானத்தில் லிபியாவின் திரிப்போலி நோக்கிப் புறப்பட்டார்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விமானத்தில் மின்கசிவு காரணமாக அவசரநிலை (Electrical Emergency) ஏற்பட்டதாகவும், மீண்டும் விமான நிலையத்திற்குத் திரும்ப அனுமதி கோரியதாகவும் துருக்கிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அங்காராவிலிருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள ஹெய்மானா (Haymana) மாவட்டத்திற்கு அருகே, இரவு 8:52 மணியளவில் விமானம் விபத்துக்குள்ளானது.

உயிரிழந்த முக்கிய அதிகாரிகள்

இந்த விபத்தில் ராணுவத் தளபதி முகமது அல்-ஹத்தாத் உள்பட மொத்தம் 5 முக்கிய அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

அல்-பிதூரி க்ரைபெல் (தரைப்படை தலைமை அதிகாரி), மஹ்மூத் அல்-காதியோய் (ராணுவத் தளவாட உற்பத்தி ஆணைய இயக்குநர்), முகமது அல்-அசாவி தியாப் (ராணுவத் தளபதியின் ஆலோசகர்), முகமது ஓமர் அகமது மஹ்ஜூப் (புகைப்படக் கலைஞர்) ஆகியோரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

விமானத்தை இயக்கிய மூன்று பிரெஞ்சு நாட்டு ஊழியர்களின் நிலை குறித்து முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

பிரதமர் அல்-திபேபா இரங்கல்

லிபியப் பிரதமர் அல்-திபேபா தனது இரங்கல் செய்தியில், "இது லிபியா தேசத்திற்கும் அதன் ராணுவத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு," என வேதனை தெரிவித்துள்ளார்.

துருக்கியின் நீதி அமைச்சர் யில்மாஸ் துங்க் (Yilmaz Tunc), இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விபத்தின் அனைத்து கோணங்களையும் அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

முன்னதாக, அல்-ஹத்தாத் அங்காராவில் துருக்கிய ராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, அந்நாட்டு ராணுவத் தளபதி செல்சுக் பயரக்டாரோக்லுவுடன் முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!
வங்கதேசம் மீது கை வைத்தால் ஏவுகணைகள் பாயும்! இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!