
"வங்கதேசத்தின் தன்னாட்சி அதிகாரத்தின் மீது இந்தியா கை வைத்தால், பாகிஸ்தானின் ஏவுகணைகள் சும்மா இருக்காது," என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் 'பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' (PML) கட்சியைச் சேர்ந்த இளையோர் பிரிவுத் தலைவர் காம்ரான் சயீத் உஸ்மானி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
வங்கதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், இந்தியா தனது 'அகண்ட பாரத' கொள்கையை அந்நாட்டின் மீது திணிக்க முயற்சிப்பதாக உஸ்மானி குற்றம் சாட்டியுள்ளார்.
வீடியோ அறிக்கை ஒன்றின் மூலம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அவர், வங்கதேசத்தை இந்தியா தவறான எண்ணத்தோடு நோக்கினால், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் ஏவுகணைகள் தொலைவில் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பாகிஸ்தானும் வங்கதேசமும் அதிகாரப்பூர்வமாக ஒரு ராணுவக் கூட்டணியை உருவாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
“பாகிஸ்தான் தனது ராணுவ முகாம்களை வங்கதேசத்திலும், வங்கதேசம் தனது முகாம்களை பாகிஸ்தானிலும் அமைத்துக்கொள்ள வேண்டும். இது இரு நாடுகளின் பாதுகாப்பையும் பலப்படுத்தும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவைச் சுற்றி வளைப்பதற்கான ஒரு மூலோபாயத் திட்டத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
"இந்தியாவுக்கு எதிராக மேற்குப் பக்கத்தில் இருந்து பாகிஸ்தானும், கிழக்கில் இருந்து வங்கதேசமும் தாக்க வேண்டும். அதே நேரத்தில் சீனா அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் எல்லையில் தனது கவனத்தைச் செலுத்தினால் இந்தியாவின் நிலைமை மோசமாகும்," என அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
மேலும், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) வங்கதேசம் தொந்தரவுக்கு உள்ளாவதாகவும், வங்கதேசத்தை ஒரு இந்து நாடாக மாற்ற இந்தியா முயற்சிப்பதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.