
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில், உயிரிழந்த தனது சக மாணவனுக்கு மற்ற குழந்தைகள் எழுதிய உருக்கமான கடிதங்கள் இணையத்தில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
ஆசிரியர் சொன்ன பொய்
ஹுய்னான் நகரில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஒருவன், தீராத உடல்நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தச் சிறுவனுக்குப் பாடம் எடுத்து வந்த வகுப்பு ஆசிரியை, இந்தத் துயரச் செய்தியை மற்ற சிறு பிள்ளைகளிடம் சொல்ல மனமில்லாமல் தவித்தார்.
பிஞ்சு மனங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, "அந்தச் சிறுவன் வேறு பள்ளிக்கு மாறிச் சென்றுவிட்டான்" என்று ஒரு பொய் கூறினார். மேலும், அந்த நண்பனுக்கு பிரியாவிடை கடிதங்களை (Farewell Letters) எழுதுமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
உண்மை தெரியாத அந்தச் சிறுவர்கள், தங்கள் நண்பன் எங்கோ ஒரு புதிய பள்ளியில் இருப்பதாக நினைத்து கடிதங்களை எழுதியுள்ளனர்.
"வகுப்பில் எப்போதும் கேள்விகளுக்கு பதில் சொல்வாய், எங்களுடன் விளையாடுவாய்... நீ போனதில் இருந்து உன்னை ரொம்ப மிஸ் பண்றோம். புதிய பள்ளியில் உனக்கு வருத்தமாக இருந்தால் இந்தக் கடிதத்தைப் படி, அது உனக்கு ஆறுதலாக இருக்கும்."
"புதிய பள்ளியில் நிறைய நண்பர்களைச் சேர்த்துக்கொள். ஆனால், எங்களை விட சிறந்த நண்பர்களைப் பிடித்துவிடாதே! இந்த ஞாயிற்றுக்கிழமை நாம் சேர்ந்து விளையாடலாம்."
"உனக்கு வருத்தம் வரும்போது நாங்கள் உன் முன்னால் இருப்பதாகவே நினைத்துக்கொள்." என்று சக மாணவர்கள் தங்கள் கடிதத்தில் எழுதியுள்ளனர்.
அந்தச் சிறுவனின் இறப்புக்கு முந்தைய கடைசி நிமிடங்கள் குறித்து ஆசிரியை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
"அவன் வலியின்றி அமைதியாகப் பிரிந்தான். ஆம்புலன்ஸில் கொண்டு வந்தால் அவன் பயந்துவிடுவான் என்று பயந்து, அவனது தந்தை காரை ஓட்ட, தாயின் மடியிலேயே அவன் உயிர் பிரிந்தது. அவன் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது." என்று குறிப்பிட்டுள்ளார்.
கடிதங்கள் மட்டுமின்றி, அழிப்பான்கள் (Erasers), விளையாட்டு அட்டைகள் (Game Cards) மற்றும் பொம்மைகளையும் மாணவர்கள் தங்கள் நண்பனுக்காக வழங்கினர். இந்த அனைத்துக் கடிதங்களையும், பொருட்களையும் ஒரு பெட்டியில் சேகரித்த ஆசிரியை, அதனை மறைந்த சிறுவனின் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
குழந்தைகளின் இந்தத் தூய்மையான அன்பும், ஆசிரியரின் நெகிழ்ச்சியான முடிவும் சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.