சிங்கப்பூரில் டாக்ஸியாக பயன்படுத்தப்படும் லெக்ஸஸ் சொகுசு கார்!

By Manikanda Prabu  |  First Published Jul 2, 2023, 1:40 PM IST

சிங்கப்பூர் வாடகை கார் வரிசையில் ஜப்பானிய சொகுசு கார் பிராண்டான லெக்ஸஸ் இணைந்துள்ளது. அந்நாட்டு சாலைகளில் லெக்ஸஸ் சொகுசு கார் விரைவில் வாடகை காராக பயன்பாட்டுக்கு வரவுள்ளது


சிங்கப்பூரில் உள்ள மிகப்பெரிய டாக்ஸி ஆபரேட்டரான ComfortDelGro Corp எனும் நிறுவனம், Lexus ES300 ஹைப்ரிட் செடான்களை பிரீமியம் வண்டிகளாக வாடகைக்கு பயன்படுத்தவுள்ளது. இதற்கான ஆர்டர்களை அந்த நிறுவனம் கொடுத்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் லெக்ஸஸ் சொகுசு கார் சிங்கப்பூர் சாலைகளில் வாடகை காராக பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

லெக்ஸஸ் சொகுசு கார் டீலரான போர்னியோ மோட்டார்ஸுடன் போடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம், சுமார் 10 மில்லியன் டாலர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை 30 கார்கள் டெலிவரி செய்யப்படும் என்று ComfortDelGro பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். மற்ற ஆடம்பர பிராண்டுகளை விட லெக்ஸஸ் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது ஒரு வணிக முடிவு என விளக்கம் அளித்துள்ளார்.

Latest Videos

undefined

அதேசமயம், லெக்ஸஸ் ஒரு கவர்ச்சிகரமான தேர்வு என்று தொழில்துறையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். ஆடம்பரப் பிரியர்களின் முக்கியத்தேர்வாக லெக்ஸஸ் பிராண்ட் கார்கள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 300,000 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு கிடைக்கும் லெக்ஸஸ் ES300h ரக கார், இதே வசதிகளுடன் கிடைக்கும் Mercedes ரகங்களை விட 30 சதவீதம் மலிவானது எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னதாக, ComfortDelGro Corp நிறுவனம், மெர்சிடிஸ் பென்ஸ் டாக்ஸியை வாங்கிய முதல் டாக்ஸி ஆபரேட்டராக திகழ்ந்தது. Mercedes E300 டர்போடீசல் செடான் ரகத்தை சேர்ந்த 30 கார்களை 1996இல் அந்த நிறுவனம் வாங்கி வாடகைக்கு விட்டது. அதன்பிறகு பல நூறு Mercedes ரக கார்களை அந்த நிறுவனம் வாங்கியது.

மற்ற டாக்சி ஆபரேட்டர்களும் இதைப் பின்பற்றி Mercedes ரக கார்களை வாங்கி வாடகைக்கு விட்டனர். 2007 வாக்கில் சுமார் 1,000 Mercedes-Benz டாக்சிகள் சிங்கப்பூர் சாலைகளில் ஓடின. தற்போது தங்களிடம் 150 Mercedes ரக கார்கள் இருப்பதாக ComfortDelGro Corp நிறுவனம் கூறியுள்ளது. Mercedes-Benz பிரீமியம் டாக்சிகளுக்கு மாற்றாக லெக்ஸஸ் ரக கார்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய், இங்கிலாந்து, நியூயார்க், ஜெர்மனி மற்றும் கம்போடியா போன்ற இடங்களில் லெக்ஸஸ் கார்கள் டாக்சிகளாகப் பயன்படுத்தப்பட்டாலும், 34 ஆண்டுகள் பழமையான டொயோட்டா நிறுவனத்துக்கு சொந்தமான லெக்ஸஸ் சொகுசு கார்கள் சிங்கப்பூர் வாடகை கார்கள் வரிசையில் இணைந்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்கள்.

சிங்கப்பூர்: பூங்காக்களில் இரவு நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்

பிராந்திய தலைமையகமான Toyota Motor Asia Pacific (TMAP) இன் கீழ் உள்ள பல நிறுவனங்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், Toyota Motor Asia Pacific  இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக, லெக்ஸஸ் சொகுசு கார் டீலரான போர்னியோ மோட்டார்ஸின் தாய் நிறுவனமான இன்ச்கேப் சிங்கப்பூர் மற்றும் சீனாவின் தலைமை நிர்வாகி ஜாஸ்மின் வோங் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நடவடிக்கை லெக்ஸஸ் கார் வாங்குபவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா? அந்த ரக கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜாஸ்மின் வோங், “இது மிகச் சிறிய எண்ணிக்கைதான். இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. உண்மையில், இது பிராண்டின் தனித்துவத்தை அதிகரிக்கும். பிரீமியம் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்ட நடவடிக்கையே இது” என தெரிவித்துள்ளார்.

ஆனால் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியின் துணைப் பேராசிரியரான டாக்டர் ஜாபர் மோமின், இது பிராண்டின் ஈர்ப்பைப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். “ஆடம்பர கார்களை டாக்சிகளாகப் பயன்படுத்தும்போது, அது பிராண்டின் இமேஜைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. குறிப்பாக, சிங்கப்பூர் போன்ற சந்தைகளில் நுகர்வோர் மிகவும் பிராண்ட் உணர்வுடன் இருக்கிறார்கள். டாக்ஸிகளாக ஓடும் லெக்சஸ் பிராண்டு கார்களை ஓட்டுவதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் ஒரு கார் தயாரிப்பாளரின் பார்வையில் சிறந்ததல்ல, ஆனால், விற்பனை டார்கெட்டை அடைய இது உதவுகிறது. இது போட்டித்தன்மைக்கு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

click me!