
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
குவைத்தில் அல்-ரெக்காய் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பல தளங்களில் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு
இந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் கடுமையான மற்றும் மிதமான தீக்காயங்களுடன் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் சிலர் மாடியில் இருந்து குதித்துள்ளனர். அதேபோல் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்த வெளிநாட்டினர் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என்ற விபரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவியை வழங்க உத்தரவு
குவைத்தின் அல்-ரெக்காய் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவர்களை ஆளுநர் ஷேக் அத்பி அல்-நாசர் ஃபர்வானியா மருத்துவமனைக்கு வந்தார். காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்த அவர், அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உயிரிழந்த 6 பேரில் 5 பேர் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.