
உக்ரைன் - ரஷ்யா போரில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ரஷ்யா மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைனிய விமானப் படைகள் (UAF) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. இதஉ 2022 இல் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா நடத்திய பெரிய தாக்குதல் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரைன் ரஷ்யாவில் உள்ள விமான தளங்களைத் தாக்கி, குறைந்தது 40 ரஷ்ய ராணுவ விமானங்களை அழித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனிய விமானப் படை தகவல்களின்படி, ரஷ்யா 472 டிரோன்களையும், ஏழு ஏவுகணைகளையும் ஏவியுள்ளது. அவற்றில் சுமார் 382 டிரோன்களையும், மூன்று ஏவுகணைகளையும் உக்ரைன் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளதாகக் கூறியுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 60 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போர் ஆரம்பத்திலிருந்து ரஷ்யா ஒரே இரவில் நடத்திய மிகப்பெரிய டிரோன் தாக்குதல் என உக்ரைன் தரப்பு கூறுகிறது.
ரஷ்யாவின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரைன் டிரோன்கள் மூலம் ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில், பல ரஷ்ய விமானத் தளங்கள் குறிவைக்கப்பட்டன. இதன் விளைவாக, 40 க்கும் மேற்பட்ட ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ராணுவ விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ரஷ்யா தரப்பிலிருந்து இந்த சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. இந்தச் சம்பவம், உக்ரைன் போரில் டிரோன்களின் பயன்பாடு மற்றும் பதிலடித் தாக்குதல்களின் தீவிரத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.