உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துக் கொண்டு இருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வடகொரியாவில் இருந்து தனக்கு என்று பிரத்யோகமாக புல்லட் புரூப் உடன் தயாரிக்கப்பட்டு இருக்கும் ரயிலில் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு வருகை தந்து இருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச இருக்கிறார். இந்த செய்தியை ரஷ்யாவின் செய்தித்தாள் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ரயில் வடகொரியாவின் பிரைமோர்ஸ்கி என்ற இடத்தை கடந்ததாக தெரிவித்துள்ளது.
ரஷ்ய நாட்டிற்குள் கிம் ஜாங் உன்னின் ரயில் சென்று இருப்பதை தென் கொரியா பாதுகாப்புத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வார இறுதியில் ரஷ்ய அதிபர் புடினை கிம் சந்திப்பார் என்று ரஷ்யா நாட்டின் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு கிம் ஜாங் உன் பயணம் மேற்கொள்வது இதுதான் முதல் முறை.
undefined
ஜி20 கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது: பிரதமர் மோடியிடம் வருத்தம் தெரிவித்த ரஷ்ய அதிபர் புடின்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு மேலும் வெடிகுண்டுகள், பீரங்கிகளை எதிர்கொள்ளும் ஏவுகணைகளை வடகொரியாவிடம் இருந்து மாஸ்கோ வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்கு மாறாக அணுஆயுத சக்தி கொண்ட நீர்மூழ்கிக் கப்பலுக்கான தொழில்நுட்பம் மற்றும் சாட்டிலைட்களை ரஷ்யாவிடம் இருந்து வடகொரியா எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் தற்போது விளாடிவோஸ்டோக் நகரில் ஆண்டு பொருளாதார அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. ''இருநாட்டு தலைவர்களும் சென்சிடிவ் விஷயங்களை பரிமாறிக் கொள்ள உள்ளனர். அமெரிக்காவின் எச்சரிக்கையை இருநாடுகளும் பொருட்படுத்தப் போவதில்லை. எங்களது நாடுகளின் நலன் பற்றிதான் நாங்கள் சிந்திப்போம். வாஷிங்டனின் எச்சரிக்கையை அல்ல'' என்று கிரம்ளின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உக்ரைன் மீது போர் தொடுக்க மாஸ்கோவிற்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கும் பட்சத்தில் அதற்கான பலனை வடகொரியா அனுபவிக்கும் என்று வாஷிங்டன் எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.