
சீனாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொட்ட ஒவ்வொரு இடத்தையும் அவரது பணியாளர்கள் நன்றாக சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனான சந்திப்புக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
பீஜிங் சந்திப்பிற்குப் பிறகு நடந்தது என்ன?
புதன்கிழமை, செப்டம்பர் 4, அன்று பீஜிங்கில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்புக்குப் பிறகு கிம் ஜாங் உன் ரஷ்ய அதிபர் புடினைச் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின், ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், ஒரு வடகொரிய அதிகாரி கிம் அமர்ந்த நாற்காலியை மிகக் கவனமாகத் துடைத்து சுத்தம் செய்கிறார். மற்றொரு அதிகாரி, ஒரு தடயவியல் நிபுணரைப் போல, கிம் பயன்படுத்திய கண்ணாடி கோப்பையை ஒரு தட்டில் எடுத்துச் செல்கிறார்.
நாற்காலியின் மர கைப்பிடிகள், அதன் இருக்கை மற்றும் அருகிலுள்ள மேசை என கிம் தொட்ட எந்தப் பகுதியையும் அவர்கள் விடவில்லை. அனைத்தையும் வடகொரிய பணியாளர்கள் மிக வேகமாக சுத்தம் செய்தனர். இது குறித்து ரஷ்ய பத்திரிகையாளர் அலெக்சாண்டர் யூனாஷேவ், “பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வடகொரியத் தலைவருடன் வந்த பணியாளர்கள், கிம் அங்கு இருந்ததற்கான அனைத்து தடயங்களையும் கவனமாக அழித்தனர். அவர் தண்ணீர் குடித்த கோப்பை, அவர் அமர்ந்த நாற்காலி மற்றும் அவர் தொட்ட அனைத்து பொருட்களையும் எடுத்துச் சென்றனர்” என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மரபணுத் திருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா?
இந்த நடவடிக்கைக்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், பல நிபுணர்கள் இது மரபணு (DNA) திருட்டைத் தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகப் பல செய்திகள் வெளியாகியுள்ளன. புடின் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அவரது மெய்க்காப்பாளர்கள் அவரது சிறுநீர் மற்றும் மல மாதிரிகளை சீல் செய்யப்பட்ட பைகளில் சேகரித்து, மாஸ்கோவிற்கு எடுத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. இதன் நோக்கம், புடினின் உடல்நலம் குறித்த தகவல்களை எதிரிகள் பெறுவதைத் தடுப்பதே ஆகும்.
இந்த இரு நாட்டுத் தலைவர்களின் அசாதாரண பாதுகாப்பு நடவடிக்கைகளும் சர்வதேச அளவில் விவாதத்தை உருவாக்கியுள்ளன.