காஷ்மீர் இந்திய மாநிலம் தான் என்று ஐ.நா சபையில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
சுதந்திரத்தின் போது சிறப்பு அந்தஸ்து பிரிவின் படி இந்தியாவோடு இணைந்த காஷ்மீரை பல ஆண்டுகளாக பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்து முயற்சிகள் எடுத்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்திய மாநிலமாக அங்கீகரித்தது.
மோடி அரசின் இந்த செயல் பாகிஸ்தானிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுநாள் வரையிலும் காஷ்மீரை இந்திய மாநிலம் என்று கூறாமல் இந்தியா நிர்வகிக்கும் பகுதி என்றே பாகிஸ்தான் கூறி வந்தது.
இதனிடையே தற்போது ஜெனீவாவில் இருக்கும் ஐ.நா சபையில் மனித உரிமைகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்ற பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் குரேஷி காஷ்மீரை இந்திய மாநிலம் தெரிவித்துள்ளார்.
நிருபர்களை சந்தித்த அவர், "காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதை போன்ற தோற்றத்தை உருவாக்கி உலக நாடுகளை நம்பவைக்க இந்திய அரசு நினைக்கிறது. அவ்வாறு உண்மையிலேயே அமைதி திரும்பி இருந்தால் சர்வதேச ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்பினரை இந்திய மாநிலமான (இந்திய பகுதி) காஷ்மீருக்குள் அனுமதிக்காதது ஏன்?. அவர்களை அனுமதித்தால் உண்மை என்ன உலகிற்கு தெரியும்",என்று கூறியுள்ளார்.
மேலும் ஐ.நா கூட்டத்தில் பேசிய குரேஷி, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் சார்பாக வலியுறுத்தி இருக்கிறார்.