கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தியா தொடர்பான எக்ஸ் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இந்தியா குறித்தும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் பற்றியும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபி அரசருமான முகமது பின் சயீத்துடன் விவாதித்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று தொலைபேசியில் முஹம்மது பின் சயீதும், நானும் இஸ்ரேலின் தற்போதைய நிலைமை குறித்து பேசினோம். நாங்கள் எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு, பொதுமக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விவாதித்தோம். இந்தியாவைப் பற்றியும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல், மதித்து நடப்பதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கனடா நாட்டின் குடிமகன். இந்த கொலையின் பின்னணியில் இந்திய அரசுக்கான தொடர்புகள் இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
ஆனால், கனடாவின் குற்றச்சாட்டுக்ளை அபத்தமானது என கூறிய இந்தியா, அந்நாட்டு தூதர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றியது. அதேபோல், கனடாவும் இந்திய தூதர்களை வெளியேற்றியது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் விசா சேவைகளை நிறுத்தியுள்ளன. இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், கனடா பிரதமர் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியா - கனடா உறவில் ஏற்பட்டுள்ள விரிசலில் இரண்டு நாடுகளுடனும் நெருங்கிய உறவை கொண்டிருக்கும் அமெரிக்கா சிக்கிக் கொண்டுள்ளது. அந்நாட்டிடம் இருந்து பாதுகாப்பான எதிர்வினையே வந்துள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறுகையி, “நிர்வாகம் ஆழ்ந்த கவலையில் இருப்பதாகவும், கனடா விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.
இந்த நாட்டு மக்கள் விசா இல்லாமல் 50 நாடுகளுக்குள் நுழையலாம்.. யார் தெரியுமா?..
ஆனால், கனடா அதிகாரிகள் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. முன்னதாக, “இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மற்றும் முக்கியமான புவிசார் அரசியல் நாடு. மேலும், கடந்த ஆண்டு இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை நாங்கள் முன்வைத்தபடி, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் நாங்கள் மிகவும் தீவிரமாக இருக்கிறோம்.” என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
“அதே நேரத்தில், வெளிப்படையாக, சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடாக, இந்த விஷயத்தின் (ஹர்தீப் சிங் நிஜார் கொலை) முழு உண்மைகளையும் நாங்கள் பெறுவதை உறுதி செய்ய இந்தியா கனடாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.