ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல்: இஸ்ரேலியர்கள் உயிரிழப்பு 400ஆக அதிகரிப்பு!

By Manikanda Prabu  |  First Published Oct 8, 2023, 5:26 PM IST

இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது


இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக பிரச்சினை நிலவி வருகிறது. முதலாம் உலகப் போருக்கு பின்னர், அகதிகளான யூதர்களுக்கு இஸ்ரேல் எனும் தனி நாடு அமைத்ததில் தொடங்கிய பிரச்சினை இன்று வரை நீடிக்கிறது. ஒட்டமான் பேரரசு வீழ்ச்சிக்கு பின்னர், பாலஸ்தீனம் நிர்கதியானது. அந்நாட்டில் அகதிகளாக குடியேறிய யூதர்கள், மேற்குலக நாடுகளின் உதவியுடன் பாலஸ்தீனத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற தனி நாடு அமைத்துக் கொண்டனர்.

அத்துடன், பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகளை தொடர்ந்து ஆக்கிரமித்து தங்களது நாட்டை பெரிதாக்கிக் கொண்டனர். ஜெருசலத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். காசா மலைக்குன்று, மேற்குகரை பகுதி மட்டுமே பாலஸ்தீனத்தின் பிராந்தியங்களாக உள்ளன. இதனிடையே, 2007ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் காசா மலைக்குன்று வந்தது. அதன் தொடர்ச்சியாக, காசா எல்லையில் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் ராணுவம் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

Latest Videos

undefined

அந்த வகையில், கடுமையான பாதுகாப்பு அமைப்புகளை மீறி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். வழக்கமாக நடக்கும் தாக்குதலை போல் அல்லாமல் இந்த முறை புதிய யுக்தியுடன் உலக நாடுகளுன் ஒத்துழைப்பும், பலம் பொருந்தியதுமான இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் அல்-அக் ஷா ஃபிளட்’ என ஹமாஸ் அமைப்பினர் பெயர் வைத்துள்ளனர். தாக்குதலை தொடங்கிய சுமார் 20 நிமிடங்களில்  இஸ்ரேலை நோக்கி 5,000 ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் அமைப்பினர் வீசினர்.  பல்வேறு எல்லையின் வழியாக ஊடுருவி, கடுமையான தாக்குதலை ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வருகின்றனர். மேலும், ராணுவ அதிகாரிகள் உள்பட பலரையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

பாலஸ்தீனத்தை விடுவிக்க இதுவே சரியான தருணம். இஸ்ரேலை அழித்து ஒழிப்போம். பாலஸ்தீனியர்கள் ஆயுதங்களுடன் இஸ்ரேலை நோக்கி முன்னேற வேண்டும் என ஹமாஸ் அமைப்பின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.         

இந்த நிலையில், இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது. இதனை இஸ்ரேலில் இருந்து வெளியாகும் அந்நாட்டு ஊடகம் உறுதிபடுத்தியுள்ளது. 

காசா முனையில் ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேசன் அயர்ன் ஸ்வார்ட்ஸ்' பெயரில் இஸ்ரேலும் தாக்குதலை துவக்கியுள்ளது. போர் களத்தில் இருப்பதாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கள் நிலைகளுக்கு உடனடியாக திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. காசாவை நோக்கி முன்னேற இஸ்ரேல் ராணுவம் வியூகம் வகுத்து வருகிறது. இரு தரப்பிலும் இந்த முறை சேதம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

click me!