Jupiter Moons: வியாழன் கிரகத்துக்கு 92 நிலவுகள்! 12 புதிய துணைக்கோள்கள் கண்டுபிடிப்பு!

By SG BalanFirst Published Feb 4, 2023, 8:06 PM IST
Highlights

வியாழன் கிரகத்தைச் சுற்றிவரும் பனிரெண்டு புதிய நிலவுகளை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புதிதாக 12 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் வியாழன் கிரகம் சூரியக் குடும்பத்தில் அதிக துணைக்கோள்களைக் கொண்ட கிரகம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

சூரியக் குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய எட்டு கோள்கள் இருக்கிறன்றன. இவற்றுடன் ஐந்து குறுங்கோள்களையும் சூரியக் குடும்பம் உள்ளிடக்கி இருக்கிறது.

ஒவ்வொரு கோளும் சூரியனைச் சுற்றிவருவது போல, கோள்களுக்கும் அவற்றைச் சுற்றிவரும் துணைக்கோள்கள் (நிலவுகள்) இருக்கின்றன. பூமிக்கு சந்திரன் மட்டும் ஒரே ஒரு துணைக்கோள். யுரேனசுக்கு 27, நெப்டியூனுக்கு 14, செவ்வாய்க்கு 2 நிலவுகள் உள்ளன.

வெள்ளி, புதன் இரண்டும் துணைக்கோள்கள் இல்லாதவை. அதிகபட்சமாக சனிக்கு 83 துணைக்கோள்கள் உள்ளன. வியாழன் கோள் 80 கோள்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது.

இப்போது வியாழன் கிரகத்துக்கு மேலும் 12 புதிய நிலவுகள் உள்ளதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் வியாழன் கிரகத்தைச் சுற்றிவரும் நிலவுகளின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் வியாழன் சூரிய குடும்பத்தில் அதிக துணைக்கோள்களைக் கொண்ட கிரகம் என்ற சிறப்பைப் பெறுகிறது. சனி இரண்டாவது இடத்துக்குத் மாறியிருக்கிறது.

வியாழன் கிரகத்தைச் சுற்றிவரும் நிலவுகளின் சுற்றுவட்டப்பாதை

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஹவாய் மற்றும் சிலியில் நிறுவப்பட்ட தொலைநோக்கிகள் மூலம்  இந்த புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்படதாகவும், இவை 0.6 முதல் 2 மைல் அளவு கொண்டவை என்றும் கார்னேகி விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்காட் ஷெப்பர்ட் கூறியுள்ளார்.

“வியாழனும் சனியும் அளவில் சிறிய நிலவுகளைக் கொண்டவை. இருந்தாலும் இந்த நிலவுகளில் ஒன்றை எதிர்காலத்தில் நெருக்கமாக படம் எடுக்க முடியும் என்று நம்புகிறோம்” ஸ்காட் குறிப்பிட்டுள்ளார்.

click me!