காசாவில் மீண்டும் தொடங்கிய போர்? ரஃபாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

Published : Oct 19, 2025, 08:19 PM IST
Israel Hamas Gaza War

சுருக்கம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதால் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ரஃபா சோதனைச் சாவடியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர் தாக்குதல்களை நடத்திவந்தது. சுமார் இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்தப் போர், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் மூலம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. ஆனால், ஒப்பந்த விதிமுறைகள் மீறப்பட்டதால் இன்று மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம்

கடந்த 10-ஆம் தேதி அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் தங்கள் வசம் உயிருடன் இருந்த 20 பணயக் கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. மேலும், கொல்லப்பட்ட 28 பணயக் கைதிகளில் பெரும்பாலானோரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன.

இருப்பினும், ஒப்பந்தப்படி கடந்த 13-ஆம் தேதிக்குள் கொல்லப்பட்ட அனைத்துப் பணயக் கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சில உடல்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆயுதங்களைக் கைவிட மறுக்கும் ஹமாஸ்

ஒப்பந்தத்தின் இரண்டாம் பகுதியாக, ஹமாஸ் தங்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். ஆனால், ஹமாஸ் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

அதேசமயம், ஒப்பந்தப்படி காசாவுக்கு அதிக அளவிலான நிவாரணப் பொருட்களை அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். ஆனால், நிவாரணப் பொருட்கள் அனுப்புவதைத் தடுப்பதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக் குழுக்களுக்கு இடையே இன்று மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ரஃபாவில் தாக்குதல்

காசா முனையில் எகிப்து எல்லையில் உள்ள ரஃபா சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 3 இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து, ரஃபா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளதால், அமலில் உள்ள போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மீண்டும் முழு அளவிலான போர் தொடங்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த இரண்டு ஆண்டுகள் நீடித்த போரில், ஹமாஸ் ஆயுதக் குழுவினர் உட்பட காசாவில் சுமார் 68,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
இந்தியாவின் எதிரி..! இனி ரஷ்யாவின் எதிரி.. இனி எவனும் வாலாட்ட முடியாது.. வேற லெவல்