
பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல்கள் நடத்திவருகிறது. இந்நிலையில், காசா பகுதியில் இருந்து ஏராளமான ஊடுருவல்கள் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடந்ததால் இஸ்ரேல் 'போர் நிலையை' அறிவித்துள்ளது.
காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினரின் இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்திவருகிறது என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் 'ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளம்' (Operation Al-Aqsa Flood) என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைக்கு "ஆபரேஷன் அயர்ன் ஸ்வாட்ஸ்" (Operation Iron Swords) என்று பெயரிட்டுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 5,000 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியதில் ஒரு மேயர் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதாகவும் ஐநூறுக்கும் மேற்பட்டவர்லகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் "போரில் ஈடுபட்டுள்ளது" என்றும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஹமாஸ் "தக்க விலை கொடுக்கும்'' என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், "நாங்கள் போரில் ஈடுபட்டுள்ளோம். ஹமாஸ் கொலைகார திடீர் தாக்குதலை இஸ்ரேல் மீதும் நாட்டு மக்கள் மீதும் நடத்தியுள்ளது. ஊடுருவிய பயங்கரவாதிகளின் குடியிருப்புகளை ஒழித்துக்கட்டுவதற்கு முதலில் உத்தரவிட்டுள்ளேன். இதுவரை அனுபவித்திருக்காத வலியை அவர்கள் அனுபவிப்பார்கள்." என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்கள் தங்கள் வீடு வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. டெல் அவிவில் உள்ள இஸ்ரேலிய இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் பேசியுள்ளார். ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலம் மோசமான தவறைச் செய்துவிட்டதாகக் கூறினார்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு ஒரு போரை ஆரம்பித்து வைத்திருக்கிறது என்று கூறிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், “இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்” என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
BREAKING: Israeli Air Force is striking terror targets in Gaza.
Israel has every right to defend itself against terrorism. pic.twitter.com/GRwuTXiV0I
பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமரின் இந்த அறிவிப்பை அடுத்து அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
புதிய தோற்றத்தில் ஏர் இந்தியா விமானம்! லோகா, டிசைன் எல்லாமே புதுசு!