இஸ்ரேல் எல்லை நகரமான ஸ்டெரோட்டை ஹமாஸ் ஏவுகணை வெறும் 15 நொடிகளில் தாக்கிவிடும்
இஸ்ரேல் பாலஸ்தீனம் போருக்கு இடையே அங்குள்ள நிலவரம் குறித்து ஏசியாநெட் நேரடி கள ஆய்வு மேற்கொண்டது. ஏசியாநெட் சுவர்ணா செய்தி ஆசிரியர் அஜித் ஹனமக்கனவர், இஸ்ரேல் நாட்டுக்கு நேரடியாக சென்று போர்க்களத்தில் இருந்து பல்வேறு தகவல்களை சேகரித்து அளித்து வருகிறார்.
காசா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஸ்டெரோட் என்ற நகரத்திற்கு அவர் பயணம் செய்தார். அங்கிருந்து வெளியேற்றப்படாத 5000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வாழ்கின்றனர். காசா எல்லைக்கு அருகிலுள்ளதால், அடிக்கடி ஏவுகணைத் தாக்குதலையும் அந்நகரம் எதிர்கொள்கிறது.
undefined
காசா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஸ்டெரோட் நகரம், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலின் மையப் புள்ளியாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டும் அஜித் ஹனமக்கனவர், நாங்கள் நகரத்தின் வழியாக நடந்து செல்லும்போது குடிமக்கள் இல்லாமல் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டதாகவும், இஸ்ரேலிய வீரர்களால் அந்த தெருக்கள் நிரம்பியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நிலைமையை தெரிந்து கொள்வதற்காக உள்ளூர் தன்னார்வத் தொண்டரிடம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் பேசியது. அப்போது 20 நிமிடங்களுக்கு முன் என்ன நடந்தது என ஏசியாநெட் சுவர்ணா செய்தி ஆசிரியர் அஜித் ஹனமக்கனவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அந்த தன்னார்வலர், “மிக அருகில் 100 மீட்டர் தொலைவில் ஒரு ஏவுகணை தாக்குதல் நடந்தது. அதில், ஒரு வீடு முற்றிலுமாக இடிந்துள்ளது, ஆனால் அதிர்ஷ்டவசமாக, எந்த காயமும் ஏற்படவில்லை.” என்றார்.
இந்த நகரம் வெறுமையாகத் தெரிகிறது. எல்லோரும் எங்கே? என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு, “ஸ்டெரோட்டில் சுமார் 30,000 பேர் வசிக்கின்றனர். ஆனால், சுமார் 25,000 பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தன்னார்வலர்களாகிய நாங்கள் மீதமுள்ள குடியிருப்பாளர்களுடன் பாதுகாப்பான இடங்களில் இருக்கிறோம். செல்லப்பிராணிகள் வைத்திருப்பதால், பலர் அதனை விட்டுவிட்டு இங்கிருந்து வெளியேற முடியவில்லை. நல்ல செய்தி என்னவென்றால், 99% மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.” என்றார்.
அதேசமயம், அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பு இங்கு பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 5,000 பேர் மட்டுமே ஸ்டெரோட்டில் உள்ளனர் என்பது நிலைமையின் தீவிரத்தை குறிக்கிறது. காசா எல்லைக்கு அருகாமையில் இருப்பதால், ஹமாஸ் பயங்கரவாதிகளால் ஏவப்படும் ஏவுகணை அந்த நகரத்தை அடைய வெறும் 15 வினாடிகளே ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் யார்? பாலஸ்தீனம் இஸ்ரேலுடன் இவர்களுக்கு என்ன பகை? ஹமாஸின் பிரம்மாண்ட சுரங்கப்பாதைகள்!!
“மூலப்பொருட்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த ராக்கெட்டுகள் நகரவாசிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன. பலத்தை வெளிப்படுத்தும் வகையில், இரண்டு ஹமாஸ் போராளிகளின் உடல்களை வெயிலில் அழுகும்படி இஸ்ரேல் ராணுவம் விட்டுச் சென்றுள்ளது. அந்த போராளிகள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவம் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக தோராயமாக ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஏவுகணைகளை ஏவுகிறது. தற்போது நிலவும் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் அந்த நகரம் உறுதியாக உள்ளதாகவும் அஜித் ஹனமக்கனவர் தெரிவித்துள்ளார்.