
இஸ்ரேலுடனான ராணுவ மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா ஈரானின் நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபோர்டோ ஆகிய மூன்று அணுசக்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானிய நிர்வாகத்திற்கு அமைதியை நாட வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். "இப்போது தாமதமின்றி செயல்படுவது நமது முறை..." என்று கூறியுள்ள அவர், அமெரிக்க கடற்படை தளங்களைத் தாக்குவதாகவும், மத்திய கிழக்கில் உள்ள முக்கிய ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி ஏன் முக்கியமானது?
ஹார்முஸ் ஜலசந்தி என்பது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய கடல்வழிப் பாதையாகும். இது உலக எரிசக்தி வர்த்தகத்தில் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தக் குறுகிய நீர்வழிப்பாதை சுமார் 21 மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இரண்டு 2 மைல் அகல கப்பல் வழித்தடங்களை கொண்டுள்ளது.
உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 26 சதவீத போக்குவரத்திற்கு இந்த வழித்தடத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இது உலகளவில் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றாக அமைகிறது. இந்த பாதையில் நடைபெறும் எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் சர்வதேச எரிசக்தி சந்தையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச எரிசக்தி அமைப்பு கூறியிருக்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் ஆயுதமா?
ஹார்முஸ் ஜலசந்தியைத் தடுக்கும் திறன் தனக்கு இருப்பதாக ஈரான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. நிலவழித்தடத்தை அடைப்பது போல இதை முழுமையாக மூடுவது சாத்தியமில்லை என்றாலும், இந்தப் பாதையில் வணிக கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பற்றதாக மாற்ற ஈரான் முயற்சி செய்யலாம். அதன் மூலம் உலக வர்த்தகத்தை சீர்குலைக்க முடியும்.
ஈரான் இத்தகைய தந்திரங்களை முன்பு பயன்படுத்தியிருப்பதை வரலாறு காட்டுகிறது. 1980களில் நடந்த ஈரான்-ஈராக் போர் (Iran-Iraq War) நடந்தபோது, சீனாவின் சில்க்வோர்ம் க்ரூஸ் (Silkworm cruise) ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி எண்ணெய் கப்பல்கள் மற்றும் ஏற்றுமதி தளங்களைத் தாக்கியது. கப்பல்களைத் தொந்தரவு செய்ய விரைவுப் படகுகளையும் பயன்படுத்தியது. இந்த நடவடிக்கைகள் ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகத்தை முழுமையாகத் தடுக்கவில்லை. ஆனால், குறிப்பிடத்தக்க கால தாமதங்கள், கப்பல் காப்பீட்டு செலவுகள் அதிகரிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தின.
அமெரிக்க காங்கிரஸின் ஆராய்ச்சி சேவையின் 2012ஆம் ஆண்டு அறிக்கையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை படிப்படியாக மூட வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கை உள்ளது. ஈரான் ஆரம்பத்தில் ஆக்ரோஷமான நடவடிக்கைகளைக் குறைத்து, பின் தேவைப்பட்டால் தீவிரப்படுத்தலாம் அல்லது ஆரம்பத்திலிருந்தே அதிக ஆக்ரோஷமான முயற்சிகளைத் தொடங்கலாம் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால்...
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கான ஈரானின் எந்தவொரு முயற்சியும் வலுவான சர்வதேச ராணுவ பதிலடியைத் தூண்டும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஈரானுக்கு அருகாமையிலும், சவுதி அரேபியா, ஈராக், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் ஈரான் போன்ற பிராந்திய சக்திகளின் எண்ணெய் ஏற்றுமதியை எளிதாக்குவதிலும் ஹார்முஸ் ஜலசந்தியின் பங்கு முக்கியமானது. இதன் காரணமாக, புவிசார் அரசியல் மோதல்களில் இந்த நீர்வழிப்பாதை முக்கியத்துவம் பெறுகிறது.
2024ஆம் ஆண்டில், ஒரு நாளைக்கு சுமார் 20 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடந்து சென்றது. இது உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் கால் பகுதியாகும்.
இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பு:
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை குறுகிய காலத்துக்கு மூடினாலும் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 முதல் 130 டாலராக உயரலாம் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். அப்போது இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு சிக்கல் ஏற்படும். இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயில் 60 சதவீதத்துக்கும் மேல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கிடைக்கிறது.
கப்பல் காப்பீட்டுக்கான பிரீமியம் 20% உயர்ந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் கப்பல்கள் நன்நம்பிக்கை முனையைச் (Cape of Good Hope) சுற்றி வருவதற்கு 15 முதல் 20 நாட்கள் தாமதமாகும். இதனால், போக்குவரத்து, காப்பீட்டு உள்பட பல செலவுகள் அதிகரிக்கும்.
சர்வதேச வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடுவது தற்போதைய நிலைமைகளில் சாத்தியமில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒருவேளை அது நடந்தாலும், இடையூறு நீண்ட காலம் நீடிக்காது என்றும் கருதுகிறார்கள்.