
இஸ்ரேலுடனான ராணுவ மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி, தனக்குப் பிந்தைய வாரிசாக மூன்று மதகுருமார்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதில் தனது மகன் மொஜ்தபாவை அவர் நியமிக்கவில்லை என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்த அச்சத்தால் காமேனி தற்போது பாதுகாப்பான பதுங்கு குழியில் இருந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
காமேனி தனது முடிவை ஈரானின் நிபுணர்கள் சபை (Assembly of Experts) மற்றும் மூத்த மதகுருமார்களிடம் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. நிலைமை விரைவான அதிகார மாற்றத்தை கோரினால், இந்த மூன்று மதகுருமார்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மூன்று பேரின் பெயர்கள் பொதுவில் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், இந்த வாரிசு பட்டியலில் காமேனியின் மகன் மொஜ்தபா காமேனியின் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. மொஜ்தபாவும் ஒரு மதகுரு ஆவார். பல ஆண்டுகளாக அவர் காமேனிக்குப் பிந்தைய வாரிசாகக் கருதப்பட்டு வந்தார்.
காமேனி, மொஜ்தபாவை நாட்டின் மிக உயர்ந்த பதவிக்குத் தயார்படுத்தி வருகிறார் என்ற ஊகங்கள் எழுந்த நிலையில், தற்போதைய இந்த அறிவிப்பு அந்த கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்பதை உணர்த்துகிறது. வாரிசுரிமை முறையை நிராகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதாரண சூழ்நிலைகளில், உச்ச தலைவரை நியமிக்கும் பணி ஈரானின் நிபுணர்கள் சபையால் நடத்தப்படும் ஒரு சிக்கலான மற்றும் ரகசியமான செயல்முறையாகும். இருப்பினும், இஸ்ரேலுடனான தற்போதைய போர் மற்றும் காமேனியின் பாதுகாப்பு குறித்த கவலைகள் வாரிசு குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
85 வயதான காமேனி, இஸ்ரேலுடனான போரில் தான் கொல்லப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஒரு பதுங்கு குழியில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. போரில் அவர் கொல்லப்படும் பட்சத்தில் திடீர் அதிகார வெற்றிடம் ஏற்பட வாய்ப்புள்ளதால், தனது வாரிசுகளைத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தனக்குப் பின் இவர்களில் ஒருவரை தலைவராகத் தேர்வுசெய்யும்படி அறிவுறுத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதலுக்கு பல ஆண்டுக்கால பகைமை காரணமாகும். 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, ஈரான் இஸ்ரேலை ஒரு சட்டவிரோத நாடாக அறிவித்ததுடன், பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டது. பல ஆண்டுகளாக, ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற குழுக்களுக்கு ஈரான் அளித்த ஆதரவு, அதன் மேம்பட்ட அணுசக்தி திட்டத்துடன் சேர்ந்து பதட்டங்களை அதிகரித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தனது இருப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக இஸ்ரேல் கருதுகிறது. இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுக்கும் நிலையில், இஸ்ரேலும் மேற்கத்திய சக்திகளும் அதனைச் சந்தேகிக்கின்றன. இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்்தவழிவகுத்தது. தற்போது நிலைமை முழு அளவிலான போர் அச்சுறுத்தலாக தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் நீண்டகால மோதலுக்குத் தயாராகி வருகின்றன.