Israel Hamas Ceasefire: காசா போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலையீடு ஏற்பட்டுள்ள இந்த உடன்படிக்கை மூலம் பாலஸ்தீன, இஸ்ரேலியக் கைதிகளை விடுவிக்கவும் இசைந்துள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்பதற்கு முன் நிகழ்ந்துள்ள இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.
காசாவில் போரை நிறுத்துவதற்கும், பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும் இஸ்ரேலும் ஹமாஸும் ஒரு முக்கிய உடன்பாடிக்கையை எட்டியுள்ளன.
அமெரிக்காவின் ஆதரவுடன் எகிப்திய மற்றும் கத்தார் மத்தியஸ்தர்களால் பல மாதங்கள் தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்ததைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் வந்துள்ளது. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பதற்கு சற்று முன்னதாக நிகழ்ந்துள்ள இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஹமாஸ் குழுவினர் பாதுகாப்புத் தடைகளை மீறி, 1,200 வீரர்கள் மற்றும் பொதுமக்களைக் கொன்று, 250க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை கடத்திச் சென்றதை அடுத்து, இஸ்ரேலிய ராணுவம் காசா மீது தாக்குல்களைத் தொடங்கியது. காசாவில் 46,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து, தற்காலிக தங்குமிடங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.
பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ள 15 மாத கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் தலையீடு:
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். போரை நிறுத்த விரைவாக தீர்வுகான வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். அமெரிக்காவின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் குழுவுடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முனைப்புடன் பணியாற்றினார்.
இஸ்ரேலின் வரலாற்றில் மிக மோசமான நாளாகப் பதிவாகியுள்ள அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பை உறுதிசெய்வதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தோல்வி அடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவது அரசின் மீதான மக்களின் கோபத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லெபனான், ஈராக், ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் பாலஸ்தீனியர்களுடன் சேர்ந்து இஸ்ரேலைத் தாக்கியதால் இஸ்ரேலும் பெரும் சேதங்களைச் சந்தித்துள்ளது. இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்நாட்டு ராணுவம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்களைக் கொன்றது.
டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு:
இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில் நிலையான அமைதிக்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டதாக தனது சமூக வலைத்தளப் பதிவில் அறிவித்துள்ளார். மத்திய கிழக்கில் உள்ள பணயக்கைதிகளை மீட்பதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ட்ரம்ப் தனது பதிவில் கூறியுள்ளார்.