அல் ஜசீரா ஊடக கட்டிடத்தை தரைமட்டமாக்கிய இஸ்ரேல்..!

By karthikeyan VFirst Published May 16, 2021, 2:29 PM IST
Highlights

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதலில் பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற பகுதியான காசாவில், சர்வதேச ஊடகங்களான அல் ஜசீரா மற்றும் அசோசியேட்டட் பிரஸ்(ஏபி) ஆகியவற்றின் அலுவலகங்கள் அமைந்திருந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த கட்டிடம் தரைமட்டமானது.
 

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாகவே மோதல் நீடித்துவருகிறது. முதல் உலகப்போர் சமயத்திலிருந்தே இரு நாடுகளும் பகை நாடுகளாக திகழ்கின்றன. ஜெருசலேத்தை இந்த இரு நாடுகளுமே புண்ணிய பூமியாக கருதுவதால், இரு நாடுகளுமே ஜெருசலேம், காசா ஆகிய பகுதிகளுக்கு சொந்தம் கொண்டாடிவருகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவிவந்த நிலையில், தற்போது பெரிய சண்டையாக வெடித்துள்ளது. கடந்த சில தினங்களாக இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதல் நடத்திவருவதால், மிகவும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. 

ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர்.

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற காசா பகுதியை மையமாக கொண்டு ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே மோதல் வெடிக்க, ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் முகாமிட்டிருப்பதாக கருதப்படும் கட்டிடத்தை தகர்க்க முடிவு செய்தது இஸ்ரேல்.

காசா பகுதியில் உள்ள அல் ஹலாலா என்ற கட்டிடத்தில் சர்வதேச ஊடகங்களான அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ்(ஏபி) ஆகியவற்றின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. அதே கட்டிடத்தில் தான் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வந்ததாகவும், அங்கு ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாகவும், அதனால் அந்த கட்டிடத்தை தகர்க்கப்போவதாக கூறி அங்கிருந்து அனைவரும் வெளியேறுமாறு எச்சரித்தது இஸ்ரேல்.

இஸ்ரேலின் எச்சரிக்கையை அடுத்து, அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எச்சரிக்கை விடுத்த அடுத்த சில நிமிடங்களில் வான்வழி தாக்குதல் மூலம் அந்த கட்டிடத்தை இஸ்ரேல் தகர்த்தது. இந்த தாக்குதலில் அந்த கட்டிடம் தரைமட்டமானது. முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான சண்டையில் பலர் உயிரிழந்துள்ளனர்.
 

click me!