இந்தியாவில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது மட்டுமே தீர்வு என அமெரிக்க அரசின் தலைமை மருத்துவர் அந்தோணி ஃபௌசி ஆலோசனை கூறியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா 2வது அலையின் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,01,993 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. முதல் அலையை விட இரண்டாவது அலையால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 523 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 853 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது மட்டுமே தீர்வு என அமெரிக்க அரசின் தலைமை மருத்துவர் அந்தோணி ஃபௌசி ஆலோசனை கூறியுள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள அவர், இந்தியா தற்போது கடுமையான மற்றும் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் உள்ளது. எனவே நாடு முழுவதும் தற்காலிகமாக முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். தேவையான அளவிற்கு ஆக்ஸிஜன் மற்றும் மருந்து பொருட்களை பெற்று, அதனை உடனடியாக விநியோகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா தொற்று பரவிய உடனேயே அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாகவும், கடந்த முறையைப் போல் மாதக்கணக்கில் முழு ஊரடங்கை அமல்படுத்தாமல் தற்காலிகமாக முழு ஊரடங்கை பிறப்பித்தாலே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவைப் போலவே அவசர கால மையங்கள், தற்காலிக கொரோனா மருத்துவமனைகளை இந்தியா உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த சமயத்தில் ராணுவத்தின் மூலமாகவும் தேவையான உதவிகளை பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அவர், கொரோனா தொற்றில் இருந்து வெற்றி பெற்றுவிட்டோம் என இந்தியா மிகவும் முன்கூட்டியே அறிவித்து விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.