அமெரிக்கா-ஈராக் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தலைவர் அபு கதீஜா கொல்லப்பட்டார்.
ISIS terrorist leader Abu Khadija killed: ஈராக்கின் அல் அன்பார் மாகாணத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய துல்லியமான வான்வழித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உயர்மட்டத் தலைவரான அப்துல்லா மக்கி முஸ்லிஹ் அல்-ரிஃபாய் கொல்லப்பட்டார். அபு கதீஜா என்று அழைக்கப்படும் அப்துல்லா மக்கி முஸ்லிஹ் அல்-ரிஃபாய் கொல்லபபட்டத்தை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
ஈராக்கிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளுடன் ஒருங்கிணைந்து அமெரிக்கா ராணுவம் மார்ச் 13 அன்று ஈராக்கின் அல் அன்பார் மாகாணத்தில் இந்த விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது. கொல்லப்பட்ட அபு கதீஜா ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகளுக்கான தலைவரும், உலகளவில் அந்தக் குழுவின் இரண்டாவது தளபதியும் ஆவார்.
யார் இந்த அபு கதீஜா?
அபு கதீஜா ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவராக விளங்கி வந்தார். தளவாடங்கள், நிதி நடவடிக்கைகள் மற்றும் உலகளாவிய பயங்கரவாதத் திட்டமிடலை அவர் மேற்பார்வையிட்டார். 2023ம் ஆண்டு அமெரிக்க அரசு அவரை உலகாளாவிய பயங்கரவாதி என அறிவித்தது. மேலும் ஈராக் மற்றும் சிரியாவில் இன்னும் தீவிரமாக செயல்படும் மிகவும் ஆபத்தான பயங்கரவாதிகளில் ஒருவராக அபு கதீஜா கருதப்பட்டார்.
அமெரிக்க-ஈராக் பாதுகாப்புப் படைகளின் கூட்டு நடவடிக்கையில் இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டுள்ளது. அபு கதீஜாவைப் பிடிக்க முந்தைய தோல்வியுற்ற சோதனையில் இருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளைப் பயன்படுத்தி அவரது அடையாளம் சரிபார்க்கப்ப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின்போது அபு கதீஜாவும் மற்றொரு ஐஎஸ்ஐஎஸ் செயல்பாட்டாளரும் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் தற்கொலை அங்கிகளை அணிந்தவர்களாகவும் காணப்பட்டனர்.
கிரீன் கார்டு வைத்திருந்தாலும் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்க முடியாது! இந்தியர்களுக்கு ஷாக்!
பயங்கரவாத வலையமைப்புகளை அகற்றுவோம்
இது தொடர்பாக பேசிய அமெரிக்க சென்ட்காம் தளபதி ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லா, ''அபு கதீஜா உலகளாவிய அமைப்பில் மிக முக்கியமான ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களில் ஒருவர். எங்கள் தாயகத்தையும் எங்கள் நட்பு நாடுகளையும் அச்சுறுத்தும் பயங்கரவாத வலையமைப்புகளை நாங்கள் தொடர்ந்து அகற்றுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.
ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, அபு கதீஜாவை உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாதிகளில் ஒருவர் என்று வர்ணித்தார், இந்த நடவடிக்கை அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
டொனால்ட் டிரம்ப் சொன்னது என்ன?
அபு கதீஜா கொல்லப்பட்டத்தை உறுதி செய்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வலிமையின் மூலம் அமைதி நிலைநாட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட அவர், ''இன்று, ஈராக்கில் தப்பியோடிய ISIS தலைவர் கொல்லப்பட்டார். அவர் நமது போர்வீரர்களால் இடைவிடாமல் வேட்டையாடப்பட்டார். அவரது துயரமான வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வலிமையின் மூலம் அமைதி நிலைநாட்டப்படும் என்று கூறியுள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஈராக் அரசுக்கும் ராணுவத்துக்கும் ஆதரவளிக்க அமெரிக்கா தங்களது 2,500 படை வீரர்களை ஈராக்கில் நிலைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுத்தமான காற்றை சுவாசிக்கும் உலகின் 5 நாடுகள்! அட! இந்த நாடும் லிஸ்ட்ல இருக்கா!