பாகிஸ்தானில் முத்தலாக் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாக்க சட்டம் கொண்டு வர இஸ்லாமிய அமைப்புகள் அந்த நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இசுலாமிய மார்க்கத்தில் விவாகரத்து செய்ய முத்தலாக் என்கிற நடைமுறை இருக்கிறது. அதன்படி ஒரு ஆண் மூன்றுமுறை தலாக் கூறி தனது மனைவிக்கு விவாகரத்து கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இது இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து முத்தலாக் நடைமுறையை இந்தியாவில் தடை செய்ய தீவிர முயற்சி எடுத்து வந்த மத்திய அரசு, சமீபத்தில் அதற்கு சட்டம் இயற்றியது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது.
இந்த நிலையில் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானிலும் முத்தலாக் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாக்க கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. பாகிஸ்தான் அரசுக்கு இஸ்லாமிய விவகாரங்களில் ஆலோசனை வழங்கும் அமைப்பு தான் இஸ்லாமிய சிந்தாந்த கவுன்சில். முத்தலாக் நடைமுறையை பற்றி தீவிரமாக விவாதித்த அந்த அமைப்பு அதை பெண்களுக்கு எதிரானதாக கருதி, தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும் என்றும் அந்த நாட்டு அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.
இந்த பரிந்துரைக்கு தனது முழு ஆதரவையும் பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் பரோக் நசீமும் தெரிவித்திருக்கிறார். தண்டனை விவரங்களை கூட பிறகு கூடி முடிவெடுத்துக்கொள்ளலாம், முதலில் நாடாளுமன்றத்தைக் கூட்டி முத்தலாக் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் முத்தலாக் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.