
தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள மொசூல் நகரை மீட்க, ஈராக் போர் தொடுக்க தயாராக உள்ளதாக ஈராக் பிரதமர் அறிவித்துள்ளார்.
ஈராக், சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில், ஈராக்கின் பிரபல நகரமான மொசூல் உள்ளது. தலைநகர் பாக்தாத்தில் இருந்து 360 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மொசூல் ஈராக்கின் 2வது மிகப்பெரிய நகரம் ஆகும்.
5 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலுமாக வெளியேறின. இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு தீவிரவாதிகள் ஈராக் ராணுவத்தை விரட்டியடித்து விட்டு மொசூல் நகரை கைப்பற்றினர். மேலும் ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவர் அபு பக்கிர் அல்–பகாதி தன்னை இந்த பகுதியின் தலைமை நிர்வாகியாக அறிவித்துக் கொண்டார்.
15 லட்சம் மக்கள் வசிக்கும் பெரிய நகரில், மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதால் இந்த நகரை மீட்பதற்கு ஈராக் ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுக்க தயங்கியது. தற்போது ஈராக்கின் பல பகுதிகளில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
மொசூல் மட்டுமே அவர்களின் பிடியில் உள்ளது. கடந்த சில மாதங்களாக மொசூல் நகரையொட்டிய பகுதிகளை கைப்பற்றி வந்த ஈராக் ராணுவம் தற்போது அந்த நகரின் நாலாபுறத்தையும் சுற்றி வளைத்து உள்ளது. சுமார் 3 லட்சம் வீரர்கள் ஆயுதங்களுடன் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதை தொடர்ந்து ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி நேற்று அதிகாலை டெலிவிஷனில் தோன்றி ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் மொசூல் நகர மக்களிடம் பேசினார்.
அப்போது சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் போல சீருடை அணிந்திருந்த அல் அபாதி பேசுகையில், ‘‘இந்த படையினர் தீவிரவாதிகளின் கொடுமைகளில் இருந்து உங்களை விடுவிப்பார்கள். உங்களுடைய கண்ணியத்தையும் பாதுகாப்பார்கள். படை வீரர்கள் உங்களின் நலனுக்காகத்தான் இதைச் செய்கிறார்கள்.
இறைவனின் அருளால் நாம் வெற்றி பெறுவோம். அதற்கான நேரமும் வந்துவிட்டது. மொசூல் நகருக்குள் அரசு படைகள் மட்டுமே நுழையும்’’ என்று மொசூல் மீது தாக்குதல் தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தற்போது மொசூல் நகரில் 4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. தங்களது நாடாக மொசூலை தீவிரவாதிகள் அறிவித்து இருப்பதால் சண்டையில் ஈடுபட இன்னும் சில ஆயிரம் பயங்கரவாதிகள் மொசூலுக்குள் ஆயுதங்களுடன் நுழைவார்கள் என்றும் தெரிகிறது.
இந்த சண்டையில் தோற்க நேர்ந்தால் சர்வதேச அளவில் தங்களுக்கு பலத்த அடி விழும் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் கருதுகின்றனர். இதனால் ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சில நாட்களாவது உச்சக் கட்டப்போர் நிகழும் என்றும் இது மிகவும் உக்கிரமாக நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் தீவிரவாதிகளிடம் இருந்து மொசூலை கைப்பற்ற ராணுவம் நடத்தும் தாக்குதலின்போது இருதரப்பினருக்குமான சண்டையில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று ஐ.நா.சபையின் மனிதாபிமான விவகாரம் மற்றும் அவசர நிவாரணத்துக்கான துணை பொதுச் செயலாளர் ஸ்டீபன் ஓ பிரியன் தெரிவித்து இருக்கிறார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘‘நகரில் மக்கள் அடர்த்தியாக வசிப்பதால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மிகுந்த அபாயத்துக்கு உள்ளாவார்கள். அவர்கள் மொசூலில் இருந்த வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படலாம். அல்லது சண்டை நடக்கும் பகுதிக்குள் சிக்கிக் கொள்ளலாம். இது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும்’’ என்றார்.
போரில் தோல்வி அடைய நேர்ந்தால் ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
இந்நிலையில் அமெரிக்க ராணுவ அமைச்சர் ஆஷ் கார்ட்டர் ஈராக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘நமது பொது எதிரியான ஐ.எஸ். தீவிரவாதிகளை தோற்கடிப்பதற்கு இந்த நடவடிக்கை மிகுந்த அவசியம் ஆகும். இக்கட்டான இந்த சண்டையில் அமெரிக்காவும், அமெரிக்காவின் தலைமையிலான கூட்டணி நாடுகளும் உங்களுக்கு (ஈராக்) ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.