தண்ணீரில் ஓடும் கார்.. 90 கி.மீ. மைலேஜ்.. வீடியோ வெளியிட்ட ஈரான் விஞ்ஞானி!

Published : Oct 21, 2025, 04:59 PM IST
Iran water car video

சுருக்கம்

ஈரான் விஞ்ஞானி கசேமி, தண்ணீரில் இயங்கும் காரை உருவாக்கியதாகக் கூறுகிறார். 60 லிட்டர் தண்ணீரில் 900 கிமீ பயணிக்கும் இந்த கார், நீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரித்து ஆற்றலை உருவாக்குவதாக அவர் விளக்குகிறார்.

பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மெல்ல அதிகரித்து வந்தாலும், புதைபடிவ எரிபொருட்களில்தான் இன்னும் உலகின் பெரும்பான்மையான வாகனங்கள் இயங்குகின்றன. இந்நிலையில், வெறும் தண்ணீரை ஊற்றி வாகனத்தை இயக்க முடியும் என்று ஈரான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி, சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஒரு லிட்டர் தண்ணீரில் 90 கிமீ பயணமா?

ஈரான் விஞ்ஞானி கசேமி என்பவர், தனது காரின் எரிபொருள் டேங்கில் தண்ணீரை நிரப்பி காரை இயக்கும் காட்சியை வெளியிட்டுள்ளார். மேலும், தனது காரை தண்ணீரில் இயக்க முடிவது குறித்த அறிவியலையும் அவர் விளக்கினார்.

கசேமி கூறுகையில், "இந்தக் காரின் டேங்கில் 60 லிட்டர் வரை தண்ணீர் நிரப்ப முடியும். இதைக்கொண்டு சுமார் 900 கி.மீட்டர் தூரம் வரை நிற்காமல் பயணிக்கலாம். சுமார் 10 மணி நேரம் வரை இடைவிடாமல் இயங்கும் திறன் கொண்டது. இதற்கு எரிபொருளோ, வெளிப்புற மின்சாரமோ தேவையில்லை. இந்த வாகனத்தின் என்ஜின், தண்ணீரை ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் பிரித்து, அதில் இருந்து எரிசக்தியை உருவாக்குகிறது. இந்த வேதியியல் மாற்றத்தைப் பயன்படுத்தி வாகனம் இயங்குகிறது," என்று தெரிவித்துள்ளார்.

"இந்த வாகனம் எந்தவிதமான மாசையும் வெளிப்படுத்தாது. நீராவியை மட்டுமே வெளியேற்றும் என்பதால், இது முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது," என்றும் கசேமி கூறினார்.

சந்தேகத்தைக் கிளப்பும் நெட்டிசன்கள்

கசேமி வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நெட்டிசன்கள் மற்றும் விஞ்ஞானச் சமூகம் ஆழ்ந்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

நெட்டிசன்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கருத்துப்படி, "தண்ணீரில் இருந்து ஆக்ஸிஜனையும், ஹைட்ரஜனையும் பிரித்தெடுப்பது என்பது அதிக ஆற்றல் தேவைப்படும் செயல்முறையாகும். உண்மையில், இந்தச் செயல்பாட்டில் ஆற்றலை உற்பத்தி செய்வதைவிட, அதை உருவாக்குவதற்கே அதிக ஆற்றல் தேவைப்படும். எனவே, கசேமியின் கூற்று வெப்ப இயக்கவியலின் (Thermodynamics) அடிப்படை விதிகளை மீறுவதாக உள்ளது," என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில், வாகனப் போக்குவரத்து துறையில் இது ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று பல நெட்டிசனன்கள் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

தண்ணீரில் வாகனத்தை இயக்க முடியும் என்று கூறும் வீடியோக்கள் வெளியாவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னரும் பல யூடியூப் சேனல்கள் இத்தகைய காணொளிகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் நம்பகத்தன்மையும் ஏற்கனவே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!