
இந்துக்களின் முதன்மை பண்டிகையான தீபாவளி நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படது. பிரதமர் மோடி விமானப்படை வீரர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்களும் தீபாவளியை கொண்டாடினர்கள். பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், வரலாற்றில் முதன் முறையாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தலைமையில் இந்த கொண்டாட்டம் நடந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் தீபாவளி கொண்டாடுவது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். விழாவின் தொடக்கத்தில், பிரதமர் ஷெரீப் இந்து சமூகத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
"தீபாவளி, இருள் மீது வெளிச்சத்தின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையின் ஆதிக்கத்தையும் குறிக்கிறது. இந்தப் பண்டிகை நமது சமூகங்களில் சகிப்புத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்தும்" என்று அவர் பேசினார்.
இந்த விழாவில் பாகிஸ்தானின் மூத்த மதத் தலைவர்கள், தூதர்கள், சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் உச்சகட்டமாக, பிரதமர் ஷெரீப் இந்து சமூக உறுப்பினர்களுடன் இணைந்து தீபாவளி கேக் வெட்டினார். தீபாவளி கொண்டாட்டத்தில் ராம் லக்ஷ்மன் வேடமிட்டவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஷெபாஸ் ஷரீப் தீபாவளி வாழ்த்து
முன்னதாக எக்ஸ் தளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஷெபாஸ் ஷரீப், தீபாவளிப் பண்டிகையின் புனிதமான நாளில், பாகிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள நமது இந்து சமூகத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளியின் ஒளியால் வீடுகளும் இதயங்களும் ஒளிரும் நிலையில், இந்தப் பண்டிகை இருளை அகற்றி, நல்லிணக்கத்தை வளர்த்து, அமைதி, இரக்கம் மற்றும் பகிரப்பட்ட செழிப்பு ஆகியவற்றின் எதிர்காலத்தை நோக்கி நம் அனைவரையும் வழிநடத்தட்டும்.
ஒன்றிணைந்து செயல்படுவோம்
இருளின் மீது ஒளியையும், தீமையின் மீது நன்மையையும், விரக்தியின் மீது நம்பிக்கையையும் உள்ளடக்கிய தீபாவளியின் உணர்வு, சகிப்புத்தன்மையற்ற தன்மை முதல் சமத்துவமின்மை வரை நமது சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க நமது கூட்டுத் தீர்மானத்தை ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு குடிமகனும், நம்பிக்கை அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல், அமைதியாக வாழவும் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். தீபாவளி வாழ்த்துக்கள்'' என்று கூறியிருந்தார்.
பாகிஸ்தானில் இந்துக்கள் மீது தாக்குதல்
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றதையொட்டி, 'பாகிஸ்தானில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர் என்பதற்கு இதுவே சாட்சி' என்று சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதில் அளித்த இந்திய நெட்டிசன்கள், ''பாகிஸ்தானில் எத்தனையோ இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எத்தனை இந்துக்கள் நாட்டை விட்டு விரட்டப்பனர்? என்பது தெரியுமா'' என்று கூறி வருகின்றனர்.