காசா பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த பத்து நாட்களாக போர் நடந்து வருகிறது. காசா பகுதியில் தரை வழி தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்கு அரபு நாடுகளில் இருந்து பகிரங்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
காசா மீது தாக்குதல் நடத்தி குழந்தைகள், பெண்களை கொல்லப்படுவதை உடனடியாக நிறுத்தாவிட்டால், பல்வேறு இடங்களில் இருந்து தாக்குதல் நடத்தப்படும் என்று அரபு நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன.
காசா பகுதிக்குள் இஸ்ரேல் படை நுழைந்தால், அந்தப் பகுதி சுடுகாடாக மாறிவிடும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்குப் பின்னர், காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை இஸ்ரேல் தாக்குதலில், காசா பகுதியைச் சேர்ந்த 2,760 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் பாதிப் பேர் குழந்தைகள் என்று தெரிய வந்துள்ளது. மேலும், 10,000 த்துக்கும் மேற்பட்ட காசா மக்கள் காயம் அடைந்துள்ளனர்.
காசா மீது எந்த நேரத்திலும் தரை வழித்தாக்குதலை இஸ்ரேல் நடத்தக் கூடும் என்பதால், காசா பகுதியில் இருந்து இதுவரை ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் காசாவின் தெற்கு பகுதிக்கும், எகிப்துக்கும் இடம் பெயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஐந்து லட்சம் மக்கள் வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் பகுதியில் இதுவரை மொத்தம் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 289 இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.
இஸ்ரேலில் 2வது போர்முனை உருவாகிறதா? ஈரான் ராணுவ வாகனங்கள் மீது திடீர் வான்வழித் தாக்குதல்!
நேரடியாக இந்தப் போரில் ஈடுபட்டு இருப்பதை டெஹ்ரான் மறுத்துள்ளது. கத்தாரில் கடந்த சனிக்கிழமை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரான் அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் இருவரும் காசா நெருக்கடி நிலை குறித்து பேசியதாகவும், தொடர்ந்து ஆதரவு கொடுப்பதாகவும் உறுதி அளித்துக் கொண்டதாகவும் ஹமாஸ் வெளியிட்டு இருந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தான், அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைத்து பாலஸ்தீனத்துக்கு உதவ வேண்டும் என்று ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர் அயதுல்லா அலி காமேனி அழைப்பு விடுத்து இருந்தார். கடவுளின் அருளால் பாலஸ்தீனியர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் என்று எக்ஸ் தளத்திலும் பதிவிட்டு இருந்தார். போரை நிறுத்துவதற்கு ஈரானும் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.
ஈராக், லெபனான், சிரியா தலைவர்களிடம் போர் நிறுத்தம் தொடர்பாக பேசுவதற்கு ஈரான் அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் சென்று இருந்தார். அலெப்போ, டமாஸ்கஸ் விமான நிலையங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பின்னர் இந்த தலைவர்களை அமீர் சந்தித்து இருந்தார்.
"பொதுமக்கள் மற்றும் காசாவின் பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்தால், நிலைமை கட்டுக்குள் இருக்கும் என்ற யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது" என்று கத்தாரைச் சேர்ந்த எமிர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தனி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவும் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஈரான் அதிபருடன் சவுதி இளவரசர் மொஹம்மது பின் சல்மான் இஸ்ரேல் - காசா குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஈரான் எந்த வகையிலும் போரில் தலையிடக் கூடாது என்பதற்காக சிரியா விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. இந்த தாக்குதலால், பல தரப்பு தாக்குதல்களையும் எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராக இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், லெபனான் உடனான போர் தொடரும் என்று நேற்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது.
காசா மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகள் எச்சரிக்கை விடுத்த இருந்த நிலையில்தான், மத்திய கிழக்கு நாடுகளை பகைத்துக் கொள்ள அமெரிக்காவும் விரும்பவில்லை. மேலும், பிராந்திய அமைதி முக்கியம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதன் எதிரொலிதான் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது என்று ஜோ பைடன் தெளிவுபடுத்தி உள்ளார்.
அதே நேரத்தில் தெற்கு காசாவில் போர் நிறுத்தம் செய்து இருப்பதாக வெளியான செய்தியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்து இருக்கிறார். காசாவில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறுவதற்கும், மனிதாபிமான அடிப்படியில் உதவுவதற்கும் போர் நிறுத்தம் தெற்கு காசாவில் அறிவிக்கவில்லை என்று அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.