
Bandar Abbas Port Explosion :ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுக நகரத்தில் சனிக்கிழமை ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. வானில் கரும்புகை மண்டலம் சூழ்ந்ததால் பரவலான பீதி ஏற்பட்டது. தெற்கு ஈரானில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமனில் அமெரிக்காவுடன் ஈரான் நடத்திய மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையுடன் இந்த வெடி விபத்து நிகழ்ந்தது. ஆனால், இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தெஹ்ரானுக்கு தெற்கே 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கன்டெய்னர் சரக்குகள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வசதிகளுக்கான முக்கிய மையமான ஷாஹித் ராஜாயி துறைமுகப் பகுதியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது.
அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சமூக ஊடகங்களில் வெளியான ஆரம்ப காட்சிகளில் சேதமடைந்த வாகனங்கள், உடைந்த ஜன்னல்கள் மற்றும் அருகிலுள்ள தெருக்களில் சிதறிக் கிடந்த குப்பைகள் காணப்பட்டன. வெடி விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.
வெடி விபத்து ஏற்பட்டதால் அருகிலுள்ள நகரங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், வெடி சத்தம் கேட்டதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஹோர்மோஸ்கன் மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மைத் தலைவர், “சில நிமிடங்களுக்கு முன்பு ஷாஹித் ராஜாயி துறைமுகத்தில் ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டது, ஆனால் காரணம் இன்னும் தெரியவில்லை” என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.