இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக சிறையில் இருந்து தப்பித்த கைதிகள், அகதிகள் போல் தமிழகம் வர வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை போராட்டம்- தப்பிய கைதிகள்
விலைவாசி உயர்வு காரணமாக இலங்கை மக்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிளாஸ் டீ குடிக்க 100 ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு பால் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் இலங்கை மக்கள் என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து வந்தனர். இதனால் ஏற்பட்ட கோவத்தில் இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிபர் கோட்டபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ராஜபக்சே பதவி விலக கோரி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இலங்கை மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஒரு சில கட்சிகள் விலக்கிக்கொண்டுள்ளன. இந்தநிலையில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே தனது குடும்பத்தோடு தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் திரிகோணமலையில் உள்ள பில்லோ ஹவுஸ் என்ற மாளிகையில் தஞ்சம் அடைந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையில் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பேருந்துகள், அரசு கட்டிடங்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு சொந்தமான இல்லங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
undefined
தமிழகத்தில் ஊடுருவ வாய்ப்பு
இந்த வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்துபவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தின் போது இலங்கை ஹம்பந்தோட்டா சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உளவுத்துறை அதிகாரிகள் தமிழக கடலோர காவல்படைக்கு ரகசிய தகவல் ஒன்றை கூறியுள்ளனர். அதில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறையால் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சிறையில் இருந்து தப்பித்த கைதிகள் அகதிகளோடு சேர்ந்து தமிழக பகுதிகளில் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே ராமேஸ்வரம், நாகை உள்ளிட்ட தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மீனவர்களும் சந்தேகம்படியாக யாரேனும் தமிழக கடல் எல்லைக்குள் வந்தால் தகவல் தெரிவிக்கும் படி கடலோர காவல்படை மீனவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.