ஜீரோ கோவிட் திட்டம்.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் 16 லட்சம் பேர் காலி... சீன ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!

By Kevin KaarkiFirst Published May 11, 2022, 12:27 PM IST
Highlights

மிக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

சீனாவில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஜீரோ கோவிட் திட்டம் நீக்கப்பட்டால் 17 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என ஷாங்காய் புடான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். தற்போது கடைபிடிக்கப்பட்டும் ஜீரோ கோவிட் திட்டம் நீங்கினால், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி பல லட்சம் பேரை காவு வாங்கிடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மார்ச் மாத நிலவரப்படி சீனாவில் தடுப்பூசி திட்டம் ஒமிக்ரான் பாதிப்பை எதிர்கொள்ளும் திறன் கொண்டிருக்கவில்லை. குறைவான தடுப்பூசி எண்ணிக்கை, மிக குறைந்த செயல்திறன் கொண்ட தடுப்பூசி மருந்து உள்ளிட்டவை ஒமிக்ரானை எதிர்கொள்ளாது. 

ஜீரோ கோவிட் திட்டம்:

சீனாவில் நடத்தப்பட்டும் கொரோனா பரிசோதனை முறைகள், கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் இன்றி ஒமிக்ரான் பரவல் எண்ணிக்கை மே முதல் ஜூலையிலான கொரோனா அலையில் மட்டும் 11.22 கோடியாக அதிகரிக்கும். இவர்களில் சுமார் 51 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட வேண்டி இருக்கும். இத்தனை பாதிப்புகளில் குறைந்த பட்சமாக பார்த்தாலும் சுமார் 16 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. 

ஷாங்காய் நேற்று மட்டும் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை 1,487 ஆக பதிவாகி இருக்கிறது. இது திங்கள் கிழமை பதிவான 3 ஆயிரத்து 014-ஐ விட குறைவு ஆகும். தனிமைப்படுத்தலுக்கு வெளியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சமூக பரவல் இல்லை என்ற நிலையில், தான் கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி சிந்திக்க முடியும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பீஜிங்கில் கொரோனா பரவல் எண்ணிக்கை திங்கள் கிழமை அன்று 74 ஆக இருந்தது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 37 ஆக குறைந்து இருக்கிறது. முன்னதாக உலக சுகாதார மையம் சீனாவில் ஜீரோ கோவிட் திட்டத்தை நீக்குவது பற்றி பரிசீலனை செய்ய வலியுறுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. 

கட்டுப்பாடுகள்:

சீனாவின் ஜீரோ கோவிட் திட்டம் மாவட்ட எல்லைகளை மூடுவது, கட்டாய தனிமைப்படுத்தல் மற்றும் அனைவருக்கும் தொடர் கொரோனா பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது. இது போன்ற கடுமையான விதிகளால் சீனாவின் பெரும்பாலான பகுதிகள் உலகை விட்டே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளுக்கு வெளியில் வழக்கம் போல் உலக நிகழ்வுகள் இயங்கி வருகிறது. 

இத்தகைய மிக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டிற்கான பொருளாதார இலக்குகளை சீனா எட்ட முடியாத சூழல் உருவாகி உள்ளது.

click me!